ஜார்க்கண்ட் மாநிலம் சாரண்டா வனப்பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர் ‘அனல் தா’ என்கிற பதி ராம் மஞ்சி உட்பட 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கும்படிஹ் கிராமம் அருகே மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சுமார் 1,500 சிஆர்பிஎப் (கோப்ரா பிரிவு) மற்றும் ஜார்க்கண்ட் போலீசார் இணைந்து இந்தத் தேடுதல் வேட்டையை நடத்தினர். பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடியாகப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் 15 பேர் பலியாகினர்.
இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட பதி ராம் மஞ்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்பின் மத்தியக் குழு உறுப்பினராக இருந்தவர். இவர் மீது ஜார்க்கண்ட் அரசு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 1987 முதல் இயக்கத்தில் தீவிரமாக இருந்த இவர் மீது 50-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்குகள் உள்ளன. 2026 மார்ச் மாதத்திற்குள் இடதுசாரி தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இந்த என்கவுண்டர் மாவோயிஸ்ட் அமைப்புக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகக் கருதப்படுகிறது. ஜார்க்கண்ட் டிஜிபி ததாஷா மிஸ்ரா இதனைப் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனப் பாராட்டியுள்ளார்.

