உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை, நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துக் கொண்டிருந்தபோது, எச்.ராஜா எதிர்பாராதவிதமாகத் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கடந்த 31-ஆம் தேதி வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், எச்.ராஜாவுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசக்கூடிய நிலையில் இருப்பதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்குச் சென்று எச்.ராஜாவின் உடல்நலம் குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

