Skip to content

ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு

ரூ. 9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் தொடர்ந்த வழக்கில் பட தயாரிப்பு நிறுவனம் பதில் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கடந்த 2024ம் ஆண்டு பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனத்துடன்  2 படங்களில் நடிக்க  ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பை தொடங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுத்ததால் வேறு படங்களில்  நடிக்க முடியாமல் போனதாக ரவி குற்றச்சாட்டியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரூ.9 கோடி கேட்டு ரவி மோகன் தொடர்ந்த வழக்கில் பட தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்.

ஏற்கனவே நடிகர் ரவி மோகன் படத்தில் நடிப்பதற்காக பெற்ற ரூ.6 கோடி முன்பணத்தை திரும்ப தரக்கோரி,  பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றம் மனு அளித்தது. அந்த மனுவில்,  கடந்த 2024ம் ஆண்டு நடிகர் ரவி மோகனுடன் 2 படங்களை தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அதற்காக ரூ.6 கோடியை முன்பணமாக  ரவி  வாங்கியதாகவும் , படத்திற்கான கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பு பணிகளை தொடங்காததால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.   அந்தப்பணத்தை ரவி தனது  சொந்த தயாரிப்பு அல்லது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளதால் பணத்தை திரும்ப தரக்கோரியும்,  ரவி தற்போது நடித்து வரும் ‘ப்ரோ கோட்’படத்தை தயாரிக்கவும், வேறு நிறுவன தயாரிப்பில்  நடிக்கவும்  ரவி மோகனுக்கு தடை விதிக்க வேண்டும் அந்நிறுவனம்  மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுபனம் தாக்கல் செய்துள்ள புகார் மனுவுக்கு ரவிமோகன் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.  இந்த நிலையில் தற்போது ரவி மோகனும் வழக்கு தொடர்ந்துள்ளதால்,  தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்குடன் நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த வழக்கும் ஜூலை 23ம் தேதி விசாரிக்கப்படும் என ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!