Skip to content

நடிகர் சூர்யாவின் பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி.. 4 பேர் கைது

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். கொலை, கொள்ளை, மோசடி, பாலியல் வன்கொடுமை ஆகியவை அதிகளவு நடப்பதாக புகார் உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில் சூர்யா வீட்டில் பணியாற்றி வந்த சுலோச்சனா என்ற பெண் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் சூர்யா திரைப்படத்தில் நடிப்பதுடன் அகரம் அறக்கட்டளை மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்து வருகிறார். அவரிடம் அந்தோணி என்பவர் தனி பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ரூ.42 லட்சம் மோசடி செய்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்தப் புகாரில் சூர்யாவின் வீட்டில் பணியாற்றி வந்த சுலோச்சனா என்ற பெண், அவரின் மகன்கள் பாலாஜி, பாஸ்கர், சகோதரி விஜயலட்சுமி ஆகிய 4 பேர் மாம்பலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடிக்கு சுலோச்சனா மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அவருக்கு குடும்பத்தினரும் உதவி செய்துள்ளனர்.

மாதம் ரூ.5,500 கட்டினால் மாதம் ஒரு கிராம் தங்கம் தருவதாகவும், ரூ.6,500 கட்டினால் வாரம் ஒரு கிராம் தங்கம் தருவதாகவும் சுலோச்சனா ஆசையை தூண்டியுள்ளார். அதை நம்பி ஆரோக்கியராஜ் ரூ.42 லட்சம் வரை கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி அவர்கள் நகை கொடுக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டிருப்பதை ஆரோக்கியராஜ் தாமதமாக உணர்ந்துள்ளார்.

இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறை அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே பாணியில் அவர்கள் பலரிடம் மோசடி செய்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் ரூ.2.5 கோடி அளவுக்கு மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

அவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் யார், யார் என்பதை விசாரித்து வரும் காவல்துறையினர், அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்வது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!