கர்நாடக மாநிலம் சிக்மகளூரை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ் ( 32). கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு தங்கநகையை மறைத்து எடுத்து வந்தார். விசாரணையில் அவர் தங்கம் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது 10-க்கும் மேற்பட்ட முறை துபாய் சென்று வந்த அவர், அங்கிருந்து வரும்போதெல்லாம் பெல்ட், பை, உடைகளில் தங்கம் கடத்தி வந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பெங்களூரில் உள்ள நடிகை ரன்யா ராவ் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.சோதனையில் அவரது வீட்டில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.3 கோடி பணம் மற்றும் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தங்கக்கடத்தல் வழக்கில் பண முறைகேடும் நடைபெற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அமலாக்கத்துறையும்,சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. நடிகை ரன்யா ராவ் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பலமுறை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். வருவாய் புலனாய்வு இயக்குனரகம் குறிப்பிட்ட காலகட்டத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தவறியதால், ரன்யாராவ் மற்றும் தருணுக்கு நிபந்தனையுடன் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது.
ஆனால், அன்னிய செலாவணி மற்றும் கடத்தல் தொடர்பான காபிபோசா சட்டம் நடிகை ரன்யா ராவ் மீது பாய்ந்துள்ளது. இதனால் அவர் ஓராண்டு சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் , நடிகை ரன்யா ராவ் மீது சட்டவிரோத தங்கக் கடத்தல் வழக்கில் மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்ககம் நடத்திய விசாரணையில், ரன்யா ராவ் 127.3 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கொண்டு வந்தது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, ரூ.102.55 கோடி அபராதம் விதித்து, அதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மூவருக்கும் தலா ரூ.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் 2,500 பக்கங்களுக்கு மேற்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதம் செலுத்தப்படாவிட்டால், ரன்யா ராவுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்குடன் தொடர்புடைய காபிபோசா மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை செப்டம்பர் 11 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.