கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32). தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர், கடந்த மார்ச் மாதம் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்தபோது, 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் உள்ள ரன்யா ராவின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 2.67 கோடி ரொக்கப் பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின.
மேலும் ரூ.34 கோடி மதிப்பிலான ரன்யா ராவின் சொத்துகளும் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், அந்நிய செலாவணி பாதுகாப்பு, கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரன்யாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ரன்யாவுடன் சேர்ந்து வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை காலத்தில் ஜாமின் கோரி விண்ணப்பிக்க முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.