Skip to content

ஆதித்யா எல் 1 விண்கலம் நாளை காலை விண்ணில் பாய்கிறது…

  • by Authour

பூமியின் துணைக் கோளான சந்திரன் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த தூரத்தை 40 நாட்களில் கடந்து சென்ற சந்திரயான்-3, நிலவின் தென் துருவத்தில் இறங்கி வெற்றிகரமாக ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சூரியன் பற்றிய ஆய்வில், தற்போது 4-வது நாடாக இந்தியா இணையப் போகிறது. பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை பற்றிய ஆய்வை இதுவரை அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த விண்வெளி நிறுவனங்களே மேற்கொண்டிருக்கின்றன.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ரூ.423 கோடி செலவில் விண்ணில் ஏவப்படும் ‘ஆதித்யா எல்-1’ விண்கலம்தான் இந்த புதிய சாதனையை நிகழ்த்தப்போகிறது. சுமார் 400 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், சூரியனின் வெளிப்புற வெப்பச் சூழல், கதிர் வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. முதன்முதலில் சூரியன் பற்றிய ஆய்வில் இறங்கியுள்ள இந்தியா, பல்வேறு கட்ட திட்டங்களை அடுக்கடுக்காக செயல்படுத்த இருக்கிறது. விண்ணில் பாயும் ஆதித்யா எல்-1 விண்கலம் முதலில் பூமிக்கு வெளியே புவி வட்டப்பாதையில் கொண்டுபோய் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. அதன்பிறகு, நீள்வட்டப்பாதையில் பூமியை சுற்றிவரும் ஆதித்யா எல்-1 விண்கலம், அதன்பிறகு சூரியன் நோக்கி நகர்த்தி செல்லப்படும். பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லெக்ரேஞ்சியன் புள்ளி 1’ என்பது தான் அதன் இலக்கு. அந்த இடத்தில்தான் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசை நிலையாக இருக்கும்.
இந்த ஆதித்யா எல்-1 விண்கலம், 127 நாட்களில் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு ‘லெக்ரேஞ்சியன் 1’ புள்ளியில் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. அங்கு இருந்தபடிதான், சூரியன் பற்றிய ஆய்வுப்பணியை ஆதித்யா எல்-1 தொடங்க இருக்கிறது. இந்த விண்கலத்தின் 24 மணி நேர கவுன்ட்டவுன் இன்று காலை 11.50 மணிக்கு துவங்கியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!