சட்டமன்ற தேர்தல் 2026 ஏப்ரல், அல்லது மே மாதத்தில் நடைபெறலாம். ஆனால் தேர்தல் கூட்டணி, தேர்தல் வியூகங்களை இப்போதே அனைத்து கட்சித்தலைவர்களும் தொடங்கி விட்டனர். ஆனால் இந்த முறையும் சீட் பெற்றே தீர வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மிகப்பெரிய யாகத்தை நடத்தி உள்ளார்.
முசிறி தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. செல்வராஜ். இவர்2016ல் இந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்தார். 21 தேர்தலில் தோல்வி அடைந்தார். 26லும் சீட் பெற்றுவிடவேண்டும் என்பதற்காக அவர் இப்போதே காய் நகர்த்த ஆரம்பித்து விட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் பிறந்தநாளையொட்டி யாகம் நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், அதன் முக்கிய நோக்கம், மீண்டும் சீட் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செல்வராஜ் இந்த யாகத்தை நடத்தினார் என கட்சிக்காரர்கள் கூறுகிறார்கள்.
முசிறி அருகே உள்ளது திருஈங்கோய் மலை.பிரசித்தி பெற்ற இம்மலையின் ஒரு பகுதியில் ஸ்ரீ லலிதாம்பிகை என்ற பெயரில் யோகினிகளால் (பெண் துறவிகள்) நடத்தப்படும் மடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி சிறப்பு பூஜைகள், வேத பாட வகுப்புகளும் நடைபெறுகிறது.துறவு வாழ்க்கை போன்று இறைவழிபாட்டை நடத்தும் யோகினிகள்
இங்கு வசித்து வருகின்றனர்.
இந்தக் கோயிலுக்கு பாண்டிச்சேரியின் முன்னாள் முதல்வர் ரெங்கசாமி இன்றளவும் அவ்வப்போது வருகை தந்து கொண்டுதான் இருக்கிறார்.
முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் ஏற்பாட்டின் படி மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில்
வேள்வி நடத்தப்பட்டது. வேள்வியில் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, அண்ணாவி, வளர்மதி, பூனாட்சி முன்னாள் கொறடா மனோகரன், மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பட்டு அங்க வஸ்திரம், வர்ணமாலைகள் அணிந்து யாக குண்டத்தை சுற்றி அமர்ந்து பெண் துறவிகள் நடத்திய வேள்வியில் அதிமுக முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கணபதி பூஜை, கோபூஜை, நடைபெற்றது அதனைத் தொடர்ந்து
மிருத் யுஞ்சய ஹோமமும் நடைபெற்றது.
எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கவும், கிரக தோஷங்கள் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கவும் இந்த யாகம் நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டிருந்த பொது மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நகர செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
திமுக தலைமை பூத் கமிட்டி அமைத்தல், அரசின் சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் விளக்கி கூறுதல், அதிருப்தியில் உள்ள தொண்டர்களை சரி செய்தல், வாக்கு வங்கியை வளப்படுத்துவது, போன்ற பணிகளை செய்து வரும் நிலையில் அதிமுக யாகம் வளர்க்கும் பணியில் இறங்கியிருப்பது பற்றி, அதிமுக தொண்டர்கள் கூறும்போது, ஜெயலலிதா காலத்திலேயே அதிமுகவினர் யாகம் வளர்க்கும் வேலைகளை செய்து வந்தார்கள். அதனால் இது புதிதல்ல என்று கூறுகிறார்கள்.