Skip to content

அதிமுக தொண்டர்கள், திமுகவில் இணைய வேண்டும்… அமைச்சர் சிவசங்கர்..

அரியலூர் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பொதுக்கூட்டம், அரியலூர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சரும், அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்…

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில்தான், இன்று பெண்கள் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர். நாமெல்லாம் ஓரணியில் தமிழ்நாடு என்று பாஜகவை வீழ்த்த, தமிழ்நாடு மானத்தை, தமிழ் மொழியை, இனத்தைக் காக்க திரண்டு நிற்கிறோம். ஆனால், அதிமுக எங்கே திரண்டு இருக்கிறது?. பாஜக பின்னால் திறண்டு நிற்கிறது.

முதல்நாள் செங்கோட்டையன் டெல்லியில் சென்று அமித்ஷாவைப் பார்க்கிறார். அதற்கு வாய்ச்சவடால் அடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அடுத்த இரண்டே நாளில் டெல்லி சென்று அமித்ஷாவைப் பார்த்து விழுந்து கும்பிடுகிறார். வெளியே வரும்போது முகத்தை யாரும் பார்க்கமலிருக்க முகமூடி போட்டு யாரும் பார்க்காமல் வருகிறார்.

அவரை இன்னும் ஏற்றி புகழ் பாடி கொண்டு இங்கே ஒரு கூட்டம் அலைந்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கெல்லாம் சொல்கிறேன், அதிமுகவையும் கழகத் தலைவர் தளபதி தான் காப்பாற்ற முடியும். எனவே எடப்பாடி பழனிசாமி அவர்களே, முதலில் நீங்கள்

எதிர்க்கட்சியாக வருவதற்கு உங்கள் கட்சியை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள். பிறகு முதல்வரை பார்த்து புகார் சொல்வதும், குறை சொல்வதும், கேலி செய்வதையும் செய்யலாம்.

இன்னும் சொல்லப்போனால் எடப்பாடி பழனிச்சாமி ஒரு முதலமைச்சராக இருந்து, ஒரு கட்சிக்கு தலைவராக துடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் தலைவராகவில்லை. ஆனால், நம்முடைய தலைவரை பார்த்து ஒருமையில் பேசுகிறார். எங்களைப் போன்றவர்கள் யாரையும் ஒருமையில் பேசக்கூடாது என்று முதல்வர் கண்டித்து வைத்துள்ளார். ஆனால் ஒரு கட்சியை வழிநடத்துகின்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வரை ஒருமையில் பேசி பேசுகிறார் என்றால் அவரது தரம் அவ்வளவுதான். அந்த தரத்தினால் தான் அவர் இன்னும் கீழே கீழே போய்க் கொண்டுள்ளார்.

அதிமுகவில் இருப்பவர்கள் விலகி, மெல்ல மெல்ல திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். காரணம் தமிழ்நாட்டை காக்க, தமிழ் இனத்தை காக்க, தமிழ் மொழியை காக்க நம்முடைய முதல்வர் தளபதி மட்டுமே ஒரே நம்பிக்கை என்பதால் தான் அதிமுகவில் இருப்பவர்கள் திமுகவில் இணைகின்றனர். இன்னும் நாட்கள் நெருங்க நெருங்க அதிமுகவில் தமிழ் மீது பற்று கொண்ட, தமிழ் இனத்தின் மீது பற்று கொண்டவர்கள் திமுகவில் இணைய இருக்கிறார்கள். அவர்கள் இணைய வேண்டும் என இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன் எனப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், மோடி தலைமையிலான பாஜக அரசு என்ன வேலை பார்க்கிறது என்பதை நாம் தினந்தோறும் செய்திகளில் பார்க்கிறோம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பீகாரில் ஊர்வலம் நடத்தினார் பீகார் மாநிலத்தில் 65 லட்சம் பேரில் வாக்குரிமையை நீக்கி உள்ளனர் அவர்கள் வாக்களித்து இருந்தால் பாஜக அன்று ஆட்சியை பிடித்திருக்க முடியாது என்பதால் திருட்டு வழியில் பாஜக இறங்கியுள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பீகாரில் விக்னேஷ் குமார் ஆகியோரது கட்சி ஆதரவளிக்கவில்லை எனில் பாஜக ஆட்சியை அமைக்க முடியாது.

மெஜாரிட்டியே அமைக்கவில்லை வந்திருக்கக்கூடிய தொகுதிகளிலும் திருட்டுத்தனமாக ஜெயித்துள்ளதால் மோடியின் திருட்டுத்தனத்தை ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். நம்முடைய முதல்வர் அங்கே சென்று உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று சொல்லி வந்திருக்கிறார். மோடி அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளார் விரைவில் வரவுள்ள ஐந்து மாநில தேர்தல்களில் தமிழ்நாடு மேற்குவங்கம் உள்ளிட்ட தேர்தல்களில் இங்கும் அந்த சூழ்ச்சியை செய்ய முடியுமா என பார்த்து கொண்டுள்ளார் அதற்கு நாம் இடம் கொடுக்க மாட்டோம்.

இந்தியாவின் சுதந்திரத்தை நோக்கி ஒரு போர் நடைபெற்றது போல இன்று இரண்டாம் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது அதில் ராகுல் காந்தி நிற்கிறார் ராகுல் காந்திக்கு கை கொடுத்து அவரை முன்னேற்றி அழைத்துச் செல்ல வேண்டிய இடத்தில் முக ஸ்டாலின் உள்ளார் ஏனெனில் இந்தியாவில் வலிமையாக பாஜகவில் எதிர்த்து குரல் கொடுக்கின்ற முதல்வர் நம்முடைய முதலமைச்சர் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உரை நிகழ்த்தினார்.

error: Content is protected !!