Skip to content

24 ஆண்டிற்கு பிறகு நடிகை தற்கொலை வழக்கில் காதலன் சரண்

ஐதராபாத்: தற்கொலை ஒப்பந்தத்தில் உயிர் பிழைப்பவர் சட்டப்படி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து சித்தார்த்த ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தெலுங்கு நடிகையாக இருந்த பிரதியுஷாவும், தொழிலதிபர் சித்தார்த் ரெட்டியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி 2002ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று பிரதியுஷா உயிரிழந்தார். ஆனால், சித்தார்த் ரெட்டி உயிர் பிழைத்தார். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், 2004ம் ஆண்டில் சித்தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில், 2011ம் ஆண்டில் ஆந்திர உயர் நீதிமன்றம் தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 17ம் தேதியன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ் பிண்டல் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக சித்தார்த்த ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்ததுடன், 4 வாரங்களுக்குள் சரணடைய உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, அமெரிக்காவிலிருந்து திரும்பிய சித்தார்த்த ரெட்டி, நேற்று ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரை சஞ்சல்குடா மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பின் போது நீதிபதிகள் கூறுகையில், ‘பரஸ்பர தற்கொலை ஒப்பந்தத்தில் உயிர் பிழைக்கும் நபர் சட்டப்படி தண்டனைக்கு உரியவர். பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கியது மற்றும் தற்கொலைக்கு உளவியல் ரீதியாக உறுதுணையாக இருந்தது ஆகியவை தற்கொலைக்கு தூண்டிய செயலாகவே கருதப்படும். மருத்துவ ஆதாரங்களின்படி இது கொலை அல்லது பாலியல் பலாத்காரம் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதி என்பது ஆதாரங்களின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பொதுமக்களின் உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல’ என்று குறிப்பிட்டனர்.

error: Content is protected !!