அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் மட்டும் அல்ல, அதிமுகவின் கடைக்கோடி தொண்டர்களும் விரும்பவில்லை. கூட்டணியில் எந்த கட்சி அதிக இடம் கேட்டாலும் இருக்கின்றது 234 பீஸ் தான் இந்த கேக்கை எப்படி வெட்டினாலும் 234 பீஸ் தான் போட முடியும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேல்நிலைப் பட்டியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், “விஜய் கட்சி ஆரம்பித்துள்ளதார், அரசாங்கத்தை எதிர்த்து தான் அனைவரும் கட்சி ஆரம்பிப்பார்கள். விஜயின் விமர்சனங்கள் எதுவும் ஆக்கப்பூர்வமானதாக தெரியவில்லை. இன்னும் எட்டு மாதங்களில் தேர்தல் வரப்போகிறது ஆக்கபூர்வமான விமர்சனமாக எனக்கு எதுவும் படவில்லை. மேலோட்டமான அரசியல் விமர்சனமாக தான் பார்க்கிறேன். ஆக்கப்பூர்வமான மாற்றம் வேண்டுமென்றால் அவர் என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறார்?, என்ன சிந்தனை இருக்கிறது? நான் எப்படி உங்களை பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறேனோ அதுபோல அவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து 121 இன்டர்வியூ கொடுத்து அவரது சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டும்.
காங்கிரஸ் கட்சி இந்திய கூட்டணியில் இருக்கிறது. திமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. எங்களுடைய கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் விலகிப் போகவில்லை, எல்லா கட்சியும் ஒற்றுமையாக இருக்கிறது. இந்த கூட்டணி வருகின்ற தேர்தலில் வெற்றி பெறும் என்று முழுமையாக நம்புகிறோம். பாஜகவுக்கும் அதிமுகவிற்கும் இருக்கின்ற உறவை அதிமுகவின் கடைகோடித் தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை, அதனால் என்னை பொறுத்த வரைக்கும் பாஜக எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணியை தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்துக் கொண்டே தான் இருப்பார்கள். அதனால் இந்த அணியை பெரியதாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. அதிமுகவிற்கு இயல்பாக கிடைக்கின்ற வாக்குகள் கூட இந்த கூட்டணியால் வராது. திருச்சி சிவா அனுபவம் வாய்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அவருக்கு நிறைய அனுபவம் உண்டு, பொது வாழ்க்கையில் 50 வருடங்களுக்கு மேலாக இருக்கிறார். ஆனால் அவர் சொல்கிற சம்பவம் வந்து இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் சம்பந்தப்பட்டது, அந்த இரண்டு முன்னாள் முதலமைச்சர்களும் இப்போது இல்லை. அவர் சொல்வது சரியா?, தவறா? என்று சொல்வதற்கு கூட தற்போது யாரிடமும் விளக்கம் கேட்க முடியாது. இதுவெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது, இன்றைக்கு இருக்கின்ற மையப் பிரச்சினைகள் நிறைய இருக்கிறது” என்று தெரிவித்தார்.