அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வரும் 4.2.2026 (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், பூத் கமிட்டி பணிகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

