திருச்சி கருமண்டபம் பகுதியில் 2014 ஆம் ஆண்டு அங்கன்வாடி மையத்திலிருந்து ஒரு பெண் அடிக்கடி சத்துமாவு போன்ற பொருட்களை திருடி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதி பொது மக்கள் அவரை கையும் களவுமாக பிடித்து, அப்போதைய அதிமுக கோட்டத் தலைவர் ஞானசேகருக்கு தகவல் அளித்தனர். பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேசனில் எஸ்எஸ்ஐ பணியாற்றிய ராக்கெட் ராஜேந்திரன் என்ற போலீசாரின் மனைவிதான் அந்த தொடர் திருட்டில் ஈடுபட்டது என தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வந்ததும் அந்தப் பெண்ணின் கணவர் ராக்கெட் ராஜேந்திரன் தான்.
இந்நிலையில் தனது மனைவி மீது வேண்டுமென்றே பொய் புகார் கூறுகிறார்கள் என ராக்கெட் ராஜேந்திரன், கோட்டத் தலைவர் ஞானசேகர் உள்ளிட்ட 3 பேர் மீது புகார் அளித்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் ராக்கெட் ராஜேந்திரன் மனைவி திருடியது அம்பலமானது. அதற்கு காவலர் ராக்கெட் ராஜேந்திரன் உறுதுணையாக இருந்தது தெரிய வந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பின்னர் பணியில்லாமல் மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன், என் மீது உள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய உதவுங்கள் என சிறப்பு உதவி ஆய்வாளர் ராக்கெட் ராஜேந்திரன் கேட்டுக் கொண்டதன் பேரில், 2014 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில், சிறப்பு உதவி ஆய்வாளர் ராக்கெட் ராஜா மீதான வழக்குகள் (ஸ்குவாஷ்) தள்ளுபடி செய்யப்பட்டது.
இதேபோன்று ஞானசேகர் உள்ளிட்டடோர் மீதான வழக்குகளும் அப்போது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பணியில் சேர்ந்தராக்கெட் ராஜேந்திரன் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கு தள்ளுபடி ஆகி 10 ஆண்டுகள் முடிந்த நிலையில், அதிமுக முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகரை கன்டோன்மெண்ட் காவல் நிலைய ஆய்வாளர் அன்பழகன் தொலைபேசியில் அழைத்து, உங்கள் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது, காவல் நிலையம் வாருங்கள் என அழைத்ததன் பேரில் போலீஸ் ஸ்டேசன் சென்றார் ஞானசேகர். அங்கே இன்ஸ்பெக்டர் இல்லை. காவலர்கள் அவரை ஒரு ரூமில் அமர கூறியுள்ளனர். பின்னர் கேட்டபோது 2014இல் உங்கள் மீது ஒரு கேஸ் உள்ளது. அதனால் உங்களை இன்ஸ்பெக்டர் அமர சொல்லி உள்ளார் என போலீசார்கள் கூறியுள்ளனர்.
தகவல் அறிந்து ஞானசேகரின் வக்கீல்கள் பொன்முருகன், தினேஷ் பாபு, கார்த்தி உள்ளிட்டோர் போலீஸ் ஸ்டேசன் வந்து, 2014 ல் தள்ளுபடி ஆன வழக்கு இது என எடுத்துக் கூறியும் ஞானசேகரை அதே அறையில் பல மணி நேரம் காக்க வைத்துள்ளனர் போலீசார் .
பின்னர் வழக்கு (ஸ்குவாஸ்) தள்ளுபடி செய்யப்பட்ட நகல் மற்றும் முன்ஜாமின் நகல் ஆகியவற்றை காவல் நிலையத்தில் கொடுத்த பின்பு ஞானசேகரிடம் கடிதம் ஒன்றை எழுதி வாங்கிக்கொண்டு

மீண்டும் இன்ஸ்பெக்டர் வரும் வரை அதே அறையில் அமர சொல்லி உள்ளனர் காவலர்கள். பின்னர் சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் வராமலேயே அவரை வெளியில் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல் நிலையம் வெளியில் வந்த ஞானசேகர் நிருபர்களிடம் கூறிய போது :-
2014 இல் முடிந்த வழக்கு சம்பந்தமாக இன்று விசாரிக்க போலீஸ் ஸ்டேசன் வர சொல்லி, நீண்ட நேரம் என்னை அமர வைத்திருந்தனர். இயற்கை உபாதைகளை கூட கழிக்க வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. தற்போது கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் சுகர், பிரஷர் உள்ள என்னை எதற்காக பெரிய கொலை குற்றவாளி போன்று இவ்வளவு நேரம் காக்க வைத்தனர் என்பது தெரியவில்லை.
நாங்கள் வழக்கை தள்ளுபடி செய்ததால் ஒருவர் மீண்டும் காவல்துறையில் பணியில் சேர்ந்து உள்ளார். அவர் தகுந்த கோர்ட் நகல்களை தராமல் பணியில் சேர்ந்து இருப்பாரா? எங்கள் மீதான கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி செய்ததற்கான நகல்கள் அப்போதே காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்திருக்கும். அல்லது கோர்ட் ஏட்டு சென்று வாங்கி இருக்க வேண்டும். இது போலீசாரின் பணி. அதை விட்டு விட்டு பல மணி நேரம் என்னை இங்கு காக்க வைத்ததால் உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளது எனக் கூறி உடனடியாக அங்கிருந்து சென்று விட்டார்.
பின்னர் அவரது வழக்கறிஞர் நம்மை தொடர்பு கொண்டு பேசிய போது, போலீஸ் ஸ்டேசனிலிருந்து வெளியே வந்த ஞானசேகருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம் என கூறினார்.
முன்னாள் அதிமுக கோட்டத் தலைவர் மற்றும் திருச்சி மாநகர் ஓட்டுநர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை போலீஸ் ஸ்டேசனில் குற்றவாளி போன்று பல மணி நேரம் காக்க வைத்து அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளது அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 வருடத்திற்கு முன்பாக நடந்த வழக்கிற்காக அதிமுக நிர்வாகியை ஸ்டேசனிற்கு அழைத்த விவகாரத்தில் அழுத்தம் கொடுத்தது யார்,? சம்பந்தப்பட்ட வழக்கு ஏற்கனவே கோர்ட் மூலம் முடிக்கப்பட்ட விபரம் போலீசுக்கு தெரியாமல் போனது எப்படி என்பது தான் ஆச்சரியம்.

