சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன். தற்போது, அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்து வரும் சூழலில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் மைத்ரேயன். 2000, 2007, 2013 ஆகிய ஆண்டுகளில் அதிமுக மாநிலங்களவை எம்.பி.யாக மைத்ரேயன் இருந்துள்ளார். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அதிமுகவின் போக்கு சரியாக இல்லை. அங்கு பல குழப்பங்கள் இருக்கின்றன. பல்வேறு நிர்வாகிகள் மன புழுக்கத்தில் இருக்கின்றனர். ஒரு சிலர் நபர்கள் திட்டமிட்டு கட்சியை கைப்பிடியில் வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். எனக்கு அமைப்புச் செயலாளர் பதவியை கொடுத்தார்கள். ஆனால் என்னை பயன்படுத்திக்கொள்ளவில்லை.
அதிமுகவின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய ஸ்விட்ச் போர்டாக டெல்லி இருக்கிறது. டெல்லி என்ன சொல்கிறதோ, அதற்கு கட்டுப்படுபவர்களாகத்தான் அதிமுக தலைமை இருக்கிறது. நாளைக்கு ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வந்தால்கூட, பாஜகவின் பங்கு எந்தளவிற்கு இருக்கும்.. மத்திய அரசின் தலையீடு எப்படி இருக்கும் என்பதை தமிழ்நாடு மக்கள் யோசிப்பார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று நினைத்துக் கொண்டிருக்கிறார்; என்ன தான் உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்து ஆகாது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியானது.. 2வது இடத்திற்குதான் போட்டி நடக்கும். திராவிட மாடல் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றிபெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பார்,”இவ்வாறு தெரிவித்தார்.