கனடாவில் உள்ள டொரண்டோ விமான நிலையத்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இன்று காலை டெல்லி நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறைக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர். அதே சமயம், விமானத்தில் இருந்த ஊழியர்கள் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து அந்த விமானம் மதியம் 3.40 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டு விமானத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னா் விமானம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கிடைக்காததால், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதிசெய்யப்பட்டது. சமீபத்தில் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

