கர்நாடக மாநிலம் மங்களூருவில் சர்வதேச விமான நிலைய மேலாளருக்கு கடந்த 29ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. செல்போனில் வந்த அழைப்பில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடித்து சிதறும் என்றும் ஒரு நபர் மிரட்டல் விடுத்தார். இந்த மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால், சோதனையில் விமான நிலையத்தில் வெடிகுண்டு இல்லை என்பதும் இது மிரட்டல் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து கர்நாடக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வேலூரை சேர்ந்த சசிகுமார் ( 38) என்பது தெரியவந்தது. அவரை கர்நாடக போலீசார் இன்று கைது செய்தனர். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் சமூகவலைதளம் மூலம் விமான நிலைய மேலாளரின் செல்போன் எண் கிடைத்ததாகவும், இதேபோல் மேலும் சில விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் சசிகுமார் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட சசிகுமார் கர்நாடகம் அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.