100 நாள் வேலை உறுதித் திட்டத்தை முடக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சி குண்டூர் பகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை திருச்சி தொகுதி உறுப்பினர் துரைவைகோ பங்கேற்று பேசுகையில்,
கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கொண்டுவந்தது. இத்திட்டத்தின் மூலம் கிராமப் பகுதியில் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாளுக்கு வேலை வழங்கப்பட்டுவந்தது. இத்திட்டம் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் ஏழைகளின் சுவாச காற்றாக விளங்கியது. அது வறுமை ஒழிப்பு திட்டமாகவும், பொரளாதார சமத்துவமின்மையை ஒழிக்கும் திட்டமாகவும் என திகழ்ந்ததாக பலரும் புகழ்ந்தனர்.
இன்றைய பாஜக அரசு ஆண்டுதோரும் இத்திட்டத்திற்கான நிதியை குறைத்து கொண்டே வந்து, தற்போது அத்திட்டத்திற்கான பெயரைமாற்றி, அத்திட்டத்தையே இல்லாமல் செய்யும் நிலையை உருவாக்கிவிட்டது.
ஆண்டுக்கு நூறு கொடுக்க வேண்டிய வேலையை நிதியை குறைத்து 50 நாள் கூட வேலை கொடுக்காத ஒன்றிய பாஜக அரசு தற்போது 125 நாள் வேலை வழங்கப்போவதாக பொய்யான வாக்குறுதியை கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே நிதி ஒதுக்காமல் இருந்து வரும் ஒன்றிய அரசு, புதிய திட்டங்கள் மூலம் தமிழக அரசுக்கு மேலும் நிதி சுமையை ஏற்படுத்தப்பார்கிறது.
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்ஷே பெயரை கேட்டால் பா.ஜ.க வினருக்கு இனிக்கிறது. அதேசமயம் காந்தியின் பெயரை கேட்டால் அவர்களுக்கு கசக்கிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அரசியல் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் சமாதானத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் சனாதான அரசியலை வளரவிடக்கூடாது என பேசினார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தித்திற்கான பெயரை மாற்றி இருப்பதற்கு யார் ஆதரவு அளித்தாலும் அவர்கள் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள் தான். அதில் எந்த பாகுபாடும் கிடையாது.
விபிஜிராம்ஜி திட்டம் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை நடைமுறை படுத்தும் பொழுது பல்வேறு சிக்கல்கள் வரும். ஒரு கட்டத்தில் முழுமையாக இந்தத் திட்டத்தையும் ஒன்றிய அரசு நிறுத்தி விடும். அந்த நோக்கில் தான் இதனை நிறைவேற்றியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் ஆட்சிகாலத்தில், தமிழக மக்களின் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து நடைமுறைபடுத்தியுள்ளோம். வரும் தேர்தலில் அதனை முன்வைத்து வாக்கு சேகரிப்போம். எதிர்க்கட்சி கூட்டணி குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொக்கையா, தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் வண்ணை அரங்கநாதன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கே எஸ் எம் கருணாநிதி தெற்கு ஒன்றிய செயலாளர் சி கங்காதரன், மற்றும் மதிமுக மாவட்ட செயலாளர்கள் மணவை மாணிக்கம், வெல்ல மண்டி சோமு மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

