மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் உயிர் தோழியாக வலம் வந்தவர் சசிகலா. 30 ஆண்டுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்த அவர், அ.தி.மு.க. உள்கட்சி விவகாரங்களையும் திரை மறைவில் இருந்து கவனித்து வந்தார்.
அதனால், அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஜெயலலிதாவை ’அம்மாஎன்றும், சசிகலாவைசின்னம்மா’ என்றும் அழைத்து வந்தனர். 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில், அவரது நிழலாக வலம் வந்த சசிகலா, நிஜ அரசியலுக்குள் நுழைந்தார்.
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவி ஏற்ற சசிகலா, அதன் பிறகு நடந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பிப்ரவரி மாதம் 7-ந் தேதி முதல்-அமைச்சராக அவர் பதவி ஏற்க இருந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பும் வந்தது. அதில், 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா உடனடியாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறை செல்லும் முன் எடப்பாடி பழனிசாமியை முதல்- அமைச்சராக அறிவித்து விட்டு சென்றார்.
அவர் 4 ஆண்டு சிறை வாசத்தை முடித்துவிட்டு வெளியே வரும்போது, அரசியல் நிலைமை எல்லாம் மாறிப்போய் இருந்தது. அ.தி.மு.க.வில் மீண்டும் அவரால் கோலோற்ற முடியவில்லை. அதன்பிறகு, அரசியலை விட்டு ஒதுங்கிய அவர், தனது ஆதரவாளர்களை மட்டும் அவ்வப்போது சந்தித்து பேசிவந்தார். இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா கூறிவந்தாலும் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. சமீபத்தில், அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிகலா, “தேர்தல் களத்தில் இறங்குவேன்” என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அதற்கான வியூகத்தையும் தனது ஆதரவாளர்களுடன் சசிகலா வகுத்து வருகிறார். தனது சகோதரர் வாகரன் நடத்தி வரும் அரசியல் கட்சியான அண்ணா திராவிடர் கழகத்தை மீண்டும் உயிர்பிக்க சசிகலா முடிவு செய்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடவும் சசிகலா திட்டமிட்டுள்ளார். அன்றைய தினம் மதுரையில் பிரமாண்ட மாநாட்டினை நடத்தி, தனது அரசியல் பிரவேசத்தை அவர் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து, தென்மாவட்டத்தில் தனக்கு செல்வாக்குள்ள 25 தொகுதிகளில், ஆதரவாளர்களை களம் இறக்க சசிகலா திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அரசியலில் எப்படி எடப்பாடி பழனிசாமி எதிரியோ, அதேபோல் தனது சகோதரி மகனான டி.டி.வி.தினகரனுடனும் சசிகலா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இந்த தேர்தலில், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க., அ.ம.மு.க. கூட்டணி அமைத்துள்ளதால், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் சிலர் சசிகலா பக்கம் சென்றுள்ளார்களாம். அவர்களையும் தேர்தல் களத்தில் இறக்கிவிட சசிகலா திட்டமிட்டுள்ளாராம்.
இந்நிலையில், திவாகரனின் மகனும், அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞரணி செயலாளருமான ஜெய் ஆனந்த் நேற்று த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து, ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, ஜெயலலிதா பிறந்த நாளான இம்மாதம் 24ம் தேதி சசிகலாவிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

