தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் கருத்துகளால் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் சிறு விரிசல் ஏற்பட்டதாக வெளியே தெரிந்தது. ஆனால் அதன்பிறகு உள்துறை மந்திரி அமித்ஷா அளித்த ஒரு பேட்டியில் கூட்டணி இருப்பதாக உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் கப்சிப் ஆனார்கள். இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் கமிஷனும் அங்கீகாரம் அளித்தது. அவரது தலைமையிலான அணிக்குத்தான் இரட்டை இலை சின்னம் என்பதும் உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை கோவையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சென்றனர். சென்னையில் இருந்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் டெல்லி சென்றார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆனபிறகு முதல் முறையாக அவர் மேற்கொண்ட டில்லி பயணம் என்பதால் டில்லியில் வந்திறங்கிய அவரை அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், சந்திரசேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் இல்லத்துக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதை முன்னிட்டு அவருக்காக அரசு இல்லத்தில் இருந்து விமான நிலையத்துக்கு கார் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அரசு இல்லத்துக்கு செல்லாமல் அசோகா ஓட்டலுக்கு சென்றார். அங்கு சிறிது ஓய்வு எடுத்த அவர், இரவு 8.45 மணிக்கு உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க கிருஷ்ணமேனன் ரோடு இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார். இரவு 9 மணிக்கு பிறகு அமித்ஷாவுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு 10 மணி வரை நடைபெற்றது. ஓரு மணிநேர சந்திப்பின்போது பா.ஜனதா அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டது. முதலில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜ-அதிமுக கூட்டணி உறுதி என்பது குறித்து அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறிய அமித்ஷா எத்தனை சீட்டு என்பது குறித்து பேசியுள்ளார். அதிமுக தரப்பில் 8 சீட்டு பாஜவுக்கு என கூறப்பட்டது. ஆனால் அண்ணாமலை 12 சீட்டு வேணும் என கூறப்பட்ட நிலையில் இறுதியில் பாஜவுக்கு 10 சீட்டு என முடிவு செய்யப்பட்டுள்ளது..
