கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே திருப்பணித்துரா பகுதியில் பூர ணத்திரேசிய மகா விஷ்ணு கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு அத்தாழ ஸ்ரீ வேலி என்ற நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியின் போது யானை மீது சாமியின் திடம்பு ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து வருவது வழக்கம். அதற்காக சாமப்புழா உன்னிகிருஷ்ணன் என்ற ஆண் யானை கோவிலுக்கு அழைத்து வரப்பட்டிருந்தது. அத்தாழ ஸ்ரீ வேலி நிகழ்ச்சிக்காக அந்த யானை நடப்புரா பந்தலில் நிறுத்தப்பட்டு இருந்தபோது, திடீரென மிரண்டு ஓட தொடங்கியது. இதனால் பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு அங்கும், இங்கும் ஒட்டம் பிடித்தனர். பின்னர் யானை அங்கிருந்து ஓடி கோவில் அலுவலக வாசல் முன்பு நின்றது.
இதையடுத்து யானையை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற பாகனை, யானை துதிக்கையால் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த திருப்பணித்துரா போலீசார் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து பக்தர்களை கோவிலில் இருந்து வெளியேற்றினர். பின்னர் கோவில் வாசல் கதவுகள் அடைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நின்றிருந்த யானையை கட்டுப்படுத்திய பிற பாகன்கள், கோவில் நிர்வாகிகள் உதவியோடு காலில் சங்கிலி போட்டு கட்டி வைத்தனர். நேற்று கோவில் திருவிழா நடைபெற்றது. இச்சம்பவத்தால் அப்ப குதியில் பரபரப்பு ஏற்பட்டது.

