பாமகவின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டித்து பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரம் கான்ஃப்ளுயன்ஸ் அரங்கத்தில் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
01 : பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி தேர்தல்களை நடத்த ஓராண்டு அவகாசம்: தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் 2026 ஆகஸ்ட் வரை பதவியில் நீடிப்பார்கள்
தமிழ்நாடு மற்றும் புதுவையில் சமூகநீதிக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் உன்னத கட்சி பாட்டாளி மக்கள் கட்சி ஆகும். அரசியல் கட்சி தொடங்கியதன் நோக்கம் பதவிகளை அனுபவிப்பதுதான் என்ற இலக்கணத்திற்கு மாறாக, பொதுமக்களுக்கு அவர்களின் உரிமைகளை வென்றெடுத்துக் கொடுப்பதையே நோக்கமாகக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. தமிழக மக்கள் அனைவரும் இதை அறிவர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும், பொதுச் செயலாளராக ச. வடிவேல் ராவணன் அவர்களும், பொருளாளராக ம.திலகபாமா அவர்களும் பொதுக் குழுவால் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் மீது பாட்டாளி மக்கள் கட்சி முழு நம்பிக்கை கொண்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதி எண் 26.2&ன்படி, “கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொதுத் தேர்தல்கள் இயல்பாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும்”. ஆனால், 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தகைய சூழலில், அனைத்து நிலை நிர்வாகிகளும் சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்வதில் தான் தீவிரமாக செயல்பட வேண்டியிருக்கும் என்பதால், பாமக உட்கட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இதைக் கருத்தில் கொண்டும், கடந்தகாலங்களில் உள்கட்சித் தேர்தல்கள் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்று தாமதமாக நடத்தப்பட்ட நிகழ்வுகளை முன்னுதாரணமாகக் கொண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களை நடத்த மேலும் ஓராண்டு காலக்கெடு வழங்குவது என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை பொதுக் குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உட்கட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் வரை தலைவர் பதவியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும், பொதுச் செயலாளர் பதவியில் ச.வடிவேல் இராவணன் அவர்களும், பொருளாளர் பதவியில் ம.திலகபாமா அவர்களும் தொடர்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.
02 : வன்னியர்களுக்கு விரைவில் இடஒதுக்கீடு வழங்காவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம்
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கலாம் என்றும், அதற்கான தரவுகளை திரட்டி இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றலாம் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி தீர்ப்பளித்தது. ஆனால் அதன்பின் 1,228 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், இன்றுவரை வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 2023ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஆணையிட்டிருந்தது. ஆனால், அதன் பின் 941 நாள்களாகியும் வன்னியர் இடஒதுக்கீடு குறித்த பரிந்துரை அறிக்கையை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அரசிடம் தாக்கல் செய்யவில்லை. இதற்காக கூறப்படும் நியாயமற்ற காரணங்களை ஏற்க முடியாது.
வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்குத் தேவையான தரவுகள் அனைத்தும் தமிழக அரசிடம் உள்ளன. அவற்றை குறித்த காலத்தில் பெற்று ஆய்வு செய்து, வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க அதிகபட்சமாக 3 மாதங்கள் போதும். ஆனால், 30 மாதங்களாகியும் வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எந்த முடிவும் எடுக்கவில்லை.
அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பட்டியலினத்தோருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நீதியரசர் நாகமோகன் தாஸ் ஆணையம் 165 நாள்களில் கர்நாடகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 101 சமூகங்களின் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் அடிப்படையில் அவர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரையை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் மட்டும் தமிழ்நாடு அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் சொல்லி வைத்துக் கொண்டு தாமதம் செய்கின்றன. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க அந்த ஆணையத்திற்கு அடுத்தாண்டு ஜூலை 11ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணையம் அதன் பதவிக் காலத்தை முடிப்பதற்கு முன்பாகவே வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவது குறித்த பரிந்துரை அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழக அரசும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இதை செய்ய மறுத்தால், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப் பெரிய அளவில் மக்களைத் திரட்டி, சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு தீர்மானிக்கிறது.
03 : தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும்; விடுதலை நாள் அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.
சமூகநீதியின் தொட்டில் என்றும், சமூகநீதியின் பிறப்பிடம் என்றும் போற்றப்படும் தமிழ்நாடு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் மட்டும் மிகவும் பின்தங்கியிருக்கிறது. சமூகநீதியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூட வழங்கப்பட்டிருக்கும் நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிவருவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயலாகும். இதை ஏற்க முடியாது.
இந்தியாவில் பீகார், கர்நாடகம், தெலுங்கானா, ஒதிசா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கணக்கெடுப்பின் அடிப்படையில் பல்வேறு சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கர்நாடகா பத்தாண்டுகளுக்கு முன்பே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்துவிட்டநிலையில், இப்போது வரும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 2ஆவது முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவுள்ளது.
மத்திய அரசின் சார்பில் அடுத்த ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும்கூட, மாநிலம் சார்ந்த சமூகநீதி தேவைகளுக்கு மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதுதான் பொருத்தமானதாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய விடுதலைநாள் விழாவில் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
04 : சமூகநீதி கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கண்டனம்
பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் அமைக்கப்படுவதன் நோக்கமே பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் சமூகநீதி சார்ந்த கோரிக்கைகளை ஆய்வு செய்து, அவற்றை நிறைவேற்றும்படி மாநில அரசுகளுக்கு பரிந்துரை வழங்குவதுதான். இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பில் தான் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நிலையான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது. அதன்பின்னர், தமிழ்நாட்டில் இதுவரை 15 பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆணையமும் அதற்கு வழங்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திருக்கிறது. நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையிலான ஆணையம், இஸ்லாமியர், அருந்ததியர் இடஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை அளித்திருந்தது. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பரிந்துரை அறிக்கை, வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரை ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசுக்கு வழங்கியது நீதியரசர் ஜனார்த்தனம் ஆணையம் தான். ஒவ்வொரு ஆணையமும் அதன் சமூகநீதி கடமைகளை செவ்வனே செய்திருக்கின்றன.
ஆனால், தற்போது பதவியில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தான் வன்னியர் இடஒதுக்கீடு பரிந்துரை அளிப்பது உள்ளிட்ட அதன் கடமைகளை நிறைவேற்றவில்லை. இதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு பாமக கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இப்போதுள்ள ஆணையத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்தில் நிறைவடைய உள்ள நிலையில், புதிய ஆணையம் அமைக்கப்படும்போது, அதில் தற்போதைய ஆணையத்தில் அங்கம் வகிக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசை பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
05 : பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மேற்கொண்டிருக்கும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தையும், அதன் நோக்கத்தையும் வெற்றி பெறச் செய்ய பா.ம.க. உறுதியேற்கிறது.
ஆபத்தான சூழலிலும், நெருக்கடியிலும் சிக்கித் தவிப்பவர்களை மீட்பது தான் அனைவரின் முதல் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் தான் திமுக தலைமையிலான கொடுங்கோல் ஆட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களை அதிலிருந்து மீட்பதற்காகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனைத்து உரிமைகளையும் மீட்டெடுத்து வழங்குவதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் 100 நாள்களுக்கு பரப்புரை செய்வதற்கான தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தொடங்கியிருக்கிறார். கடந்த ஜூலை 25&ஆம் நாள் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கிய இந்தப் பயணம் நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளில் தருமபுரியில் நிறைவடையவுள்ளது. முதல்கட்ட பயணத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சென்ற இடங்கள் அனைத்திலும் அவருக்கு கிடைத்த வரவேற்பும் மக்கள் எழுச்சியும் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டதையே காட்டுகிறது.
கொடுங்கோல் ஆட்சியை அகற்றி, மக்கள் நலன் காக்கும் அரசை ஏற்படுத்துவது தான் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மேற்கொண்டிருக்கும் பயணத்தின் நோக்கம் ஆகும். உன்னத நோக்கத்திற்காக அவர் மேற்கொண்டிருக்கும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணயத்தை வெற்றி பெறச் செய்வதற்காகவும், அதை விட மிகவும் முக்கியமாக இந்தப் பயணத்தின் நோக்கங்களை வீடு வீடாக சென்று மக்களுக்கு புரியவைப்பதன் மூலம் தமிழகத்தில் நடைபெறும் கொடிய ஆட்சியை அகற்றவும் கடுமையாக உழைக்க பா.ம.க. பொதுக்குழு உறுதியேற்கிறது.
06 : பெண்கள் பாதுகாப்பு, சட்டம் & ஒழுங்கை உறுதி செய்யத் தவறிய திராவிட மாடல் அரசுக்கு கண்டனம்
இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலம், பெண்களைப் போற்றும் மாநிலம் என்றெல்லாம் அடைமொழிகள் வழங்கப்பட்டாலும் கூட, தமிழ்நாட்டில் பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி நடமாடுவதற்கான சூழல் இல்லை என்பதுதான் உண்மையாகும். அண்ணா பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த மாணவி, ஆளும் திமுகவின் அனுதாபி ஒருவனால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கொடிய நிகழ்வு இந்த குற்றச்சாட்டை உறுதி செய்கிறது. அண்மையில் திருவள்ளூரை அடுத்த ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வு தமிழ்நாடு பெண்களுக்கு ஆபத்தான மாநிலமாக மாறியிருப்பதை உணர்த்துகிறது. பள்ளிக் கூடங்கள், மாணவர் விடுதிகள் உள்ளிட்ட எந்த இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால், இந்த உண்மைகள் எதுவும் முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவதில்லை என்பதுதான் வேதனை அளிக்கும் உண்மையாகும்.
பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருப்பதற்குக் காரணம் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக புழங்கத் தொடங்கியிருப்பதுதான். தமிழகத்தின் பல பகுதிகளில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும்போதெல்லாம், அதை மூடிமறைப்பதற்குத்தான் தமிழக அரசு முயற்சி செய்கிறதே தவிர, அத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்வதில்லை. காவல்துறை கட்டுக்கோப்பாக செயல்படாததால், சட்டம் & ஒழுங்கு நிலை வெகு வேகமாக சீரழிந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி, தமிழ்நாட்டில் சட்டம் & ஒழுங்கைப் பாதுகாக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சமின்றி நடமாடுவதற்குரிய சூழலை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
07 : தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழ்நாட்டை கஞ்சா நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் அளவுக்கு மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் வணிகம் தலைவிரித்தாடுகிறது. போதைப் பொருட்களின் எளிய இலக்காக இளம் தலைமுறையினர் இருப்பதால், அவர்களில் பலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகின்றனர். போதைப் பொருட்கள் மாணவர்களுக்கு எளிதாகக் கிடைப்பதுதான் இதற்குக் காரணம் ஆகும். தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழித்தால் மட்டும்தான் இளைஞர்களை போதைப் பொருள் அரக்கனின் பிடியில் இருந்து மீட்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களில் 12 விழுக்காட்டினர் போதைப் பழக்கத்திற்கு ஆளாகியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் ஒழிக்கப்படவில்லை என்றால், அடுத்த சில ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஓர் இளைஞர் போதைப் பொருளுக்கு அடிமை ஆகியிருப்பதை தடுக்க முடியாது. இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இந்தப் பொதுக்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
08 : தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்கு.
தமிழ்நாட்டில் ஒரு சொட்டு மது இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நி\லைப்பாடு ஆகும். இதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் 45 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். 1989&ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போது நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானமே தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பது தான். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்துவற்கு காரணமே பாட்டாளி மக்கள் கட்சியால் ஏற்படுத்தப்பட்ட மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு தான்.
ஆனாலும், தமிழ்நாட்டை ஆளும் திமுகவுக்கு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் எந்த அக்கறையும் இல்லை. தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கை ஏற்படுத்தப்போவதாக வாக்குறுதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 500 மதுக்கடைகளை மூடினார். ஆனால், அதற்கு மாற்றாக தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத சந்துக் கடைகளை திறப்பதற்கு மறைமுக ஆதரவு அளித்தார். இப்படிப்பட்டவரின் ஆட்சியில் தமிழகத்தில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பது பகல்கனவாகவே அமையும். ஆனாலும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறப்படுத்த வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய ஆட்சியில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்துவதை சாத்தியமாக்க உழைப்பதற்கு பா.ம.க. உறுதியேற்கிறது.
09 : தமிழ்நாட்டில் 4 முறை உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும்
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு 3 ஆண்டுகளில் 4 முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.45,000 கோடி கூடுதலாக வருமானம் கிடைக்கிறது. ஆனாலும் தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து இழப்பில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. 2022&23ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.10,000 கோடியாக இருந்தது. அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அரசுக்கு ரூ.23,000 கோடி கூடுதல் வருமானம் கிடைத்தது. இயல்பான சூழலில், கூடுதல் வருமானத்தின் காரணமாக மின்வாரியம் இலாபம் ஈட்டியிருக்க வேண்டும். மாறாக, 3 ஆண்டுகளில் ரூ.45,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் மின்வாரியம் தொடர்ந்து இழப்பில்தான் இயங்கி வருகிறது. இதில் இருந்தே மின்வாரியத்தில் எந்த அளவுக்கு நிர்வாக சீர்கேடு தலைவிரித்தாடுகிறது என்பதை உணரலாம்.
மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி முடிக்காமல், தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கும் வரை மின்வாரியத்தை இலாபத்தில் இயக்க முடியாது. எனவே, தமிழகத்தில் நிலுவையில் உள்ள மின்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். மின்சார வாரியத்தின் சொந்த மின்உற்பத்தியை மாநிலத்தின் மொத்த தேவையில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக உயர்த்த வேண்டும். அதன் மூலம் மின்உற்பத்தி செலவை பெருமளவில் குறைத்து மின்வாரியத்தை இலாபத்தில் இயக்க வேண்டும். தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் அளவுக்கு அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பதால், உயர்த்தப்பட்ட கட்டணத்தை பாதி அளவையாவது குறைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி ஒருமனதாக வலியுறுத்துகிறது.
10 : தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 10 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முதலீடுகள் வந்திருப்பதாகவும், அதன் வாயிலாக 31 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதனால் இது அப்பட்டமான பொய் ஆகும். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் வாயிலாக தமிழ்நாட்டில் ரூ.10.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை செய்ய அரசுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தான் செய்யப்பட்டிருக்கின்றனவே தவிர, அவை அனைத்தும் முதலீடுகளாக மாறிவிடவில்லை.
தமிழக அரசே வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்கள் தான் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. அவ்வாறு இருக்கும்போது பொய்யான விவரங்களைக் காட்டி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விவகாரத்தில் இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. அதை நிறைவேற்றும் வகையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் எவ்வளவு? அவற்றைக் கொண்டு தமிழகத்தில் எங்கெங்கு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன? அவற்றின் மூலம் எத்தனை இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என பாமக கோருகிறது.
11 : தமிழ்நாட்டில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட வாய்ப்புகள் உள்ள அனைத்து ஆறுகளின் குறுக்கேயும் தடுப்பணைகளைக் கட்டுவதை ஓர் இயக்கமாக அரசு மாற்ற வேண்டும்.
மேட்டூர் அணை நடப்பாண்டில், அண்மையில் மூன்றாவது முறையாக நிரம்பியதைத் தொடர்ந்து அணையிலிருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடிக்கும் கூடுதலான நீர், அதாவது ஒரு நாளைக்கு 11 டி.எம்.சிக்கும் கூடுதலான நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதனால், ஒரு நாளைக்கு 10 டி.எம்.சி நீர் வீணாகச் சென்று கடலில் கலந்தது. ஒரு நாள் முழுவதும் இதே நீடித்த சூழலில், அடுத்து வந்த நாள்களிலும் கணிசமான நீர் வீணாக கடலில் கலந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 20 முதல் 25 டி.எம்.சி நீர் வீணாக கடலில் கலந்திருக்கக்கூடும். இந்த நீரை சேமித்து வைத்திருந்தால் நெருக்கடியான கால கட்டங்களில் ஒரு மாதத்திற்கான பாசனத் தேவையை இந்தத் தண்ணீரைக் கொண்டு நிறைவேறியிருக்க முடியும். ஆனால், தடுப்பணைகளைக் கட்டத் தவறியதற்கான தண்டனையாக இவ்வளவு நீரை இழந்து தவிக்கிறோம்.
மழையால் கிடைக்கும் தண்ணீரில் ஒரு சொட்டைக் கூட தேவையில்லாமல் கடலில் கலக்கவிடக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளால் இனி வரும் காலங்களில் மழைப் பொழிவையும், வறட்சியையும் கணிக்க முடியாது என்பதால், கிடைக்கும் நீரை சேமித்து வைக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, தமிழ்நாட்டில் அனைத்து ஆறுகளின் குறுக்கேயும் வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகளைக் கட்டுவதை ஓர் மக்கள் இயக்கமாக அரசு மாற்ற வேண்டும் என பா.ம.க. கேட்டுக்கொள்கிறது.
12 : காவிரி – கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசன மாவட்டங்களின் நீர் ஆதாரமாகத் திகழும் காவிரி ஆற்றுப் பிரச்சினைக்கு இன்றுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில், காவிரி -& கோதாவரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 200 டிஎம்சிக்கும் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். ஆனால் ரூ.89,000 கோடி செலவிலான இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒதிசா, மராட்டியம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களுடன் பலகட்ட பேச்சு நடத்தியும்கூட எந்தப் பயனும் ஏற்படவில்லை. காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் நோக்குடன் அனைக்கப்பட்டுள்ள நதிகள் இணைப்புக்கான சிறப்புக் குழுவின் கூட்டம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தலைமையில் கடந்த ஜூலை 15&ஆம் நாள் நடைபெற்றது. அதன்பயனாக காவிரி & கோதாவரி இணைப்பில் முன்னேற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது.
காவிரி கோதாவரி இணைப்பால் பயனடையும் மாநிலம் என்ற வகையில், அதற்கான மத்திய அரசின் முயற்சிகளுக்கு தமிழக அரசும் துணை நிற்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசுகளுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி கருத்தொற்றுமை ஏற்படுத்த உதவுவதன் மூலம் காவிரி & கோதாவரி ஆறுகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கோருகிறது.
13 : தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி ரூ.2,151 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தவேண்டும்; பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்க மறுத்ததைக் காரணம் காட்டி, 2024&25ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2,151 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. 2025&26ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான நிதியையும் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இதனால், தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது, கல்விபெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு எந்த நிபந்தனையும் இல்லாமல் வழங்க வேண்டும். மும்மொழிக் கொள்கை போன்ற நடைமுறைக்கு சாத்தியமற்ற திட்டங்களை திணித்து, அவற்றை செயல்படுத்தினால் தான் நிதி வழங்க முடியும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது. மத்திய அரசு நிதி வழங்காததால், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் 8 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதைத் தடுக்கும் வகையிலும், அனைவருக்கும் கல்வி வழங்கும் வகையிலும், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
14 : அரசுப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. இதற்குக் காரணம் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாதது தான். அரசுப் பள்ளிகளுக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஒரு பட்டதாரி ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் தான் 2,800 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை.
தொடக்கக் கல்வித்துறை சார்பில் 22,831 தொடக்கப் பள்ளிகளும், 6,587 நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரே ஒரு பிரிவு இருப்பதாக வைத்துக் கொண்டாலும், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 851 வகுப்பறைகள் இருக்க வேண்டும். ஆனால், தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை வெறும் 65,000 மட்டும் தான். இதனால், ஒரு லட்சத்திற்கும் கூடுதலான வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இத்தகைய சூழலில், அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவது சாத்தியமே இல்லை. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளுக்கு குறைந்தது ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஒரே ஆண்டில் இவ்வளவு ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசின் நிதிநிலை தடையாக இருக்கும் பட்சத்தில், ஆண்டுக்கு 25,000 ஆசிரியர்கள் வீதம் அடுத்த 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்குமாறு பாமக வலியுறுத்துகிறது.
15 : அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; 9,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஓராண்டிற்கும் மேலாக முதல்வர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதனால் அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி மற்றும் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மற்றொருபுறம் இந்தக் கல்லூரிகளில் உள்ள 10,500க்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அனைத்துக் கல்லூரிகளிலும் கௌரவ விரிவுரையாளர்களை நியமித்துதான் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன. நிலையான உதவிப் பேராசிரியர்கள் இல்லாததால், அரசுக் கல்லூரிகளில் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்தே அரசுக் கல்லூரிகளுக்கு 4,000 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறி வருகிறது. ஆனால், இதுவரை ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க கடந்த மாதம் நடத்தப்படுவதாக இருந்த போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. அரசுக் கலைக் கல்லூரிகளில் கல்வித் தரம் குறைந்துவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, நடப்பாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதேநிலை நீடித்தால் ஒரு காலத்தில் தரமான கல்வி நிலையங்களாக திகழ்ந்த அரசுக் கல்லூரிகள், அவற்றின் அடையாளத்தை இழந்துவிடும். எனவே, அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் உடனடியாக முதல்வர்களை நியமிக்க வேண்டும். அதேபோல், காலியாக உள்ள சுமார் 9,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
16: மக்களை ஏமாற்ற மோசடித் திட்டங்களை செயல்படுத்தும் திமுக அரசுக்கு கண்டனம்
தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, உண்மையான அக்கறையுடன் செயல்பட்டிருந்தால், அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால், நான்கரை ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும் வகையில், எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாத திமுக அரசு, அதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மனக்குறையையும், வெறுப்பையும் போக்கும் வகையில் விளம்பர நோக்கம் கொண்ட மோசடித் திட்டங்களை செயல்படுத்த முனைகிறது. இதன் நோக்கம் தமிழக மக்களை ஏமாற்றுவது மட்டுமே.
பொதுச் சேவை வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை இப்போது செயல்படுத்த தேவை ஏற்பட்டிருக்காது. அனைவருக்கும் அனைத்து சேவைகளும் இயல்பாகவே கிடைத்திருக்கும். அதேபோல், அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற விளம்பரத் திட்டம் தேவைப்பட்டிருக்காது. இந்தத் திட்டங்கள் அனைத்துமே திமுக அரசின் கடந்த நான்கரை ஆண்டுகால தோல்வியை மறைப்பதற்கான முகமூடிகள் தான். இவற்றால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்ட இத்தகைய மோசடித் திட்டங்களை செயல்படுத்தும் திமுக அரசுக்கு, பாமக பொதுக்குழு கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறது.
17 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வந்த பழைய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டது. 01.04.2003 முதல் அரசுப் பணிகளில் சேரும் அனைவருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டம் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய நிலையில், அரசுத் துறைகளில் பணியாற்றும் சுமார் ஒன்பதரை இலட்சம் ஊழியர்களில் இரண்டரை லட்சம் பேர் மட்டுமே பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பயன்களைப் பெற தகுதியானவர்கள் ஆவர். மீதமுள்ள சுமார் 7 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் கிடைக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு இருக்காது என்பதால், அவர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் அமைப்புகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்களை வலியுறுத்தி வருகின்றனர்.
2021ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சி அமைத்து நான்கரை ஆண்டுகள் ஆகும் நிலையில், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாத தமிழக அரசு, காலம் தாழ்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய போக்கைக் கைவிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
18 : அரசுத் துறைகளில் காலி இடங்களை நிரப்பி, 6.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்தால், பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு காலியிடங்களை நிரப்பவோ, புதிய பணியிடங்களை ஏற்படுத்தவோ திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கமாக அரசுத் துறைகளில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு மாற்றாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை ஆறரை லட்சமாக உயர்ந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 45,000 பேருக்கு மட்டும் தான் நிலையான பணி வழங்கப்பட்டிருக்கிறது. அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருக்கும் படித்த இளைஞர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, தமிழக அரசு இதுவரை வழங்கியுள்ள நிலையான பணிகளின் எண்ணிக்கை 1% கூட அல்ல. அரசுத் துறைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வுகாணும் வகையில் அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களையும் நிரப்ப வேண்டும். அதன் மூலம் 6.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.
19 : சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் தொடர்கதையாகி விட்டது. மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் தமிழக மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த ஒன்றரை மாதங்களில் தமிழக மீனவர்கள் 80 பேர் அவர்களின் படகுகளுடன் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்கூட இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடல்பரப்பு மிகவும் குறுகியதாகும். அதனால், இரு தரப்பு மீனவர்களும் பரஸ்பரம் எல்லை தாண்டாமல் மீன்பிடிப்பது சாத்தியமல்ல. எனவேதான் இந்திய & இலங்கை கடற்பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் முறைவைத்து மீன்பிடிக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட வேண்டும் என்று மீனவர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக இருநாட்டு மீனவர்கள் மற்றும் அரசுகளுக்கு இடையே நடத்தப்பட்டு வந்த பேச்சுகள் பாதியில் கைவிடப்பட்ட நிலையில், அவற்றை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இருதரப்பு பேச்சுகளை மீண்டும் தொடங்குவதன் மூலம் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.