கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது அமைதி நகர். இந்த அமைதி நகர் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் குழந்தைகளின் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது, இதில் அமைதி நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் என இரண்டு பகுதியிலிருந்தும் சுமார் 25,க்கும் மேற்பட்ட குழந்தைகளை பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி கட்டிடம் பராமரிப்பின்றி காணப்படும் நிலையில் கட்டிடத்தில் உள்ள மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்து அவ்வப்போது குழந்தைகள் மீது விழுகின்றன. இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் மேலும் அங்கன்வாடி மையத்திற்கு முன்பு முழுவதும் புதர் மண்டி கிடைப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் அதிக அளவில் சுற்றி திரிகிறது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடி பகுதிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில் பலமுறை நகராட்சி அலுவலகத்திலும் துறை சார்ந்த அதிகாரிகளிடமும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த கட்டிடத்தை பராமரிப்பு செய்ய வேண்டுமென மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த அங்கன்வாடி குழந்தைகளை அப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சிதளம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடியை இடித்து புதிதாக கட்டுவதாக நகராட்சி நிர்வாகம் கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது இதை சரி செய்யாமல் இடிந்துள்ள பகுதிகளை மட்டும் காங்கிரீட் பூசப்பட்டு மேலும் கட்டிடத்திற்கு வர்ணம் பூசப்பட்டு இன்னும் இரண்டு நாட்களில் திறக்கப்பட உள்ளதாக குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அங்கன்வாடி மைய ஊழியர்கள் தெரிவித்து குழந்தைகளை மீண்டும் இந்த அங்கன்வாடிக்கு அனுப்புமாறு கூறியுள்ளனர்.
ஆனால் கட்டிடத்தை இடித்து சரி செய்யாமல் உள்ளதால் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் இந்த கட்டிடம் இடிந்து விட வாய்ப்புள்ளதால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக கூறி உடனடியாக இந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென கூறி மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. மேலும் இந்த கட்டிடத்தை பிடித்து வேறு கட்டிடம் கட்டாமல் இந்த கட்டிடத்தில் குழந்தைகளை அமர்த்தினால் உடனடியாக மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

