Skip to content

அங்கன்வாடி ஆசிரியை மூளைச்சாவு- உடல் உறுப்பு தானம்

இடைகால் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (49). இவர் அங்கன்வாடியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7ம்தேதி அன்று மாலை 3 மணி அளவில் அம்பாசமுத்திரத்திலிருந்து, தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அம்பாசமுத்திரம் கலை கல்லூரி அருகில் பின்னால் வந்த கார் மோதியதில் விபத்துக்குள்ளானார்.

பலத்த காயம் ஏற்பட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக முதலுதவிக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் உயர் சிகிச்சைக்காக அன்று மாலை 5 மணி அளவில் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளார் என்பதை தெரிவித்தனர்.

மறுநாள் 8ம்தேதிஅன்று அவரின் மூளையின் செயல்பாட்டை கண்டறிவதற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கை முடிவில் அவருடைய மூளையின் செயல்பாடு இல்லை, அவர் மூளை சாவு அடைந்தார் என்பதனை குடும்ப உறவினர்களிடம் தெரிவித்தனர்.

அதன்பின் குடும்ப உறுப்பினருடன் ஆலோசித்து முனியம்மாளின் உடல் உறுப்புகளான கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கருவிழிகள் மற்றும் தோல் தானமாக கொடுக்க முன்வந்தனர். நேற்று அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு அவரின் உடலுக்கு டீன் டாக்டர் ரேவதி பாலன் தலைமையில் மருத்துவர்கள் மரியாதை செய்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

error: Content is protected !!