Skip to content

மகளுடன் பேசிய ஆத்திரம்: வாலிபரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட தந்தை கைது

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ் (22). இவர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் கண்ணூர்யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து வந்துள்ளார்.அவருடன் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளி தியாகராஜன், அதே ரெயிலில் தனது மகளுடன் பயணம் செய்தார். இவரும் தமிழகத்தை சேர்ந்தவர் தான். முகேஷும், தியாகராஜனும் ஒரே ரப்பர் தோட்டத்தில் வேலை பார்த்து வந்ததால் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதனால் கண்ணூர்யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரசில் ஒரே பெட்டியில் தான் பயணம் செய்துள்ளனர்.அப்போது தியாகராஜனின் மகள் வெகுநேரமாக இருக்கைக்கு வரவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்று பார்த்து வருவதாக முகேஷ் சென்றுள்ளார். ஆனால் அவரும் திரும்பி வரவில்லை. இதையடுத்து தியாகராஜன் இருவரையும் தேடிச் சென்றார்.

அப்போது அவரது மகளும், முகேஷும் ரெயில் பெட்டியின் வாசல் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும் தியாகராஜனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர் முகேஷை எட்டி உதைத்தார். இதனால் அவர் ஓடும் ரெயிலில் இருந்து வெளியே விழுந்துவிட்டார். இரவு நேரம் என்பதால் இதனை அந்த பெட்டியில் இருந்த சக பயணிகள் கவனிக்கவில்லை.இந்த நிலையில் அந்த ரெயில் கோவை வந்ததும், தன்னுடன் பயணித்த முகேஷ் என்பவர் காணாமல் போய்விட்டார் என்று ரெயில்வே போலீசில் அந்த தொழிலாளி புகார் கூறினார்.

இரவு நேரம் என்பதால் அவர் ரெயிலில் இருந்து கீழே தவறி விழுந்திருக்கலாம் என்று கருதிய கோவை ரெயில்வே போலீசார், அது குறித்து பாலக்காடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் பாலக்காடு மற்றும் கோவை ரெயில்வே போலீசார் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரெயில் தண்டவாளங்களில் தேடினர். அப்போது பாலக்காடு ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான காஞ்சிரக்கடவு ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் முகேஷ் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்
ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாகவே ரெயில்வே போலீசார் முதலில்
கருதினர். அதன்படி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.இந்த நிலையில்
முகேஷ் ரெயிலில் வந்தபோது காணாமல் போனதாக போலீசாரிடம் தகவல் கூறிய
தியாகராஜனின் சில நடத்தைகள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆகவே
முகேஷ் சாவு கொலையாக இருக்கலாமா என்ற சந்தேகம் பாலக்காடு ரெயில்வே
போலீசாருக்கு எழுந்தது. இதையடுத்து தியாகராஜனிடம் ரெயிலில் ஏறிய இடம்,
அவர்களுக்கு இடையே உள்ள நட்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார்
விசாரணை நடத்தினர்.

அப்போது தியாகராஜன் முன்னுக்கு பின் முரணான தகவல்களை
தெரிவித்தார். இதனால் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்
ரெயிலில் இருந்து எட்டி உதைத்து தள்ளி முகேஷை கொன்றது தெரியவந்தது. தனது
மகளுடன் பேசிக் கொண்டிருந்த ஆத்திரத்தில் அப்படி நடந்துகொண்டதாக போலீசிடம்
தியாகராஜன் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து தியாகராஜனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு
வருகிறது. ஓடும் ரெயிலில் இருந்து எட்டி உதைத்து தள்ளி தமிழக வாலிபர்
கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!