கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களில் யெஸ் வங்கி ரூ.2,965 கோடி முதலீடு செய்தது. பின்னர் இந்த முதலீடு வாராக் கடன்களாக மாறின.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.11,000 கோடி பொது நிதி, யெஸ் வங்கி மூலமாக அனில் அம்பானி குழுமத்தின் நிதி நிறுவனங்களுக்கு வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அனில் அம்பானியின் 18 சொத்துக்களை அமலாக்கத் துறை தற்போது முடக்கியது. இவற்றின் மதிப்பு ரூ.1,120 கோடி ஆகும். கடந்த 2010 முதல் 2012-ம் ஆண்டு வரை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ.40,185 கோடி கடன் பெற்று அதை தவறாக பயன்படுத்தியது.
இந்த முறைகேடுகளையும் அமலாக்கத்துறை விசாரித்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ரூ.8,997 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏற்கெனவே முடக்கி உள்ளது. தற்போது முடக்கப்பட்ட ரூ.1,120 கோடி சொத்துக்களையும் சேர்த்து மொத்தம் ரூ.10,117 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

