கோவை, பொள்ளாச்சி கோபாலபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத பணம் ரூ 66 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
தமிழக – கேரள எல்லையான பொள்ளாச்சியை அடுத்த கோபாலபுரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி உள்ளது. பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்ல மீன்கரை ரோடு மற்றும் பாலக்காடு ரோடு என இரண்டு சாலைகள் மிகப் பிரதானமாக உள்ளது.
இதில் பாலக்காடு ரோடு கோபாலபுரம் வழியாக வாகனப் போக்குவரத்து அதிக அளவில் இருந்து வருகிறது. அதிலும் இவ்வழித்தடத்தில் காய்கறிகள், மாடு, கோழி மற்றும் பல்வேறு பொருட்களும் அதிக அளவில் லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் அதிக அளவில் இந்த வழித்தடத்திலேயே சொல்கின்றன. ஆகவே வாகன போக்குவரத்து மிகுந்த இந்த வழித்தடத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இங்கு வாகனங்களை தணிக்கை செய்வது, வாகனங்களுக்கான ஆர்.சி. புத்தகம், இன்ஷூரன்ஸ், பர்மிட் உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதித்தல் உள்ளிட்ட பணிகளை சரிவர மேற்கொள்ளாமல் வாகன ஓட்டுநர்களிடம் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் எழிலரசி, துணை ஆய்வுக்குழு அலுவலர் சங்கீதா மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோபாலபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாய் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கணக்கில் வராத 66 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் தமிழ் செல்வியிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
