அதிமுகவில் எம்ஜிஆர் காலம் தொட்டும் உறுப்பினராக இருந்தவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா . 1986ஆம் ஆண்டு மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்டு தேர்வானார். அந்த சமயத்தில் அதிமுகவின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக அன்வர் ராஜாவை நியமித்தார் எம்ஜிஆர். அப்போது இருந்த 15 ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களில் ஜெயலலிதாவும், அன்வர் ராஜாவும் மட்டுமே அமைச்சராக பதவி வகிக்காதவர்கள். 1989 தேர்தலில் ஜானகி அணி சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
அதிமுக முழுவதுமாக ஜெயலலிதா வசம் சென்ற நிலையில் அன்வர் ராஜா தன்னை மீண்டும் அதிமுகவில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். குறிப்பாக 2001 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற அவருக்கு தொழிலாளர் நல ஆணையர் பதவி வழங்கப்பட்டது. 2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். வக்பு வாரியத்தின் தலைவராகவும் சில காலம் இருந்துள்ளார். இதனிடையே 2021ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா 2023ஆம் ஆண்டு மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
அதே சமயம் பாஜக – அதிமுக கூட்டணி அமைந்ததின் இருந்து அன்வர் ராஜா கடும் அதிருப்தியில் இருந்தார். மேலும், கூட்டணியை எதிர்த்து வெளிப்படையாகவே பேட்டி அளித்தார். இந்த சூழலில் கடந்த மாதம் அதிமுகவில் இருந்து விலகிய அன்வர் ராஜா, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர் பேட்டியளித்த அன்வர் ராஜா, தேர்தலில் அதிமுக வென்றால் 10 நாளில் ஆட்சியை பாஜக கவிழ்த்துவிடும் என்று கருடதது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “புலவர் இந்திரகுமாரி அவர்கள் வகித்து வந்த திமுக இலக்கிய அணித் தலைவர் பொறுப்பில் கழக சட்டதிட்ட விதி: 31 பிரிவு: 10அ-ன் படி முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சில ஆண்டுகளில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த பலருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் மாவட்டச் செயலாளராகவும், மேற்கு மண்டல தேர்தல் பிரிவு பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார். பழனியப்பன் தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளராக பழனியப்பனும், தேனி வடக்கு மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்கள். அதேபோல ஈரோடு மாவட்டச் செயலாளராக தோப்பு வெங்கடாச்சலமும் பதவி வகித்து வருகிறார்.
அதிமுகவில் அன்வர் ராஜாவுக்கு 2019, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் சீட் மறுக்கப்பட்டது. ஆனாலும், அதிமுக மீது இருந்த விசுவாசம் காரணமாக அதிருப்தியில் இருந்தாலும் கட்சியில் நீடித்து வந்தார். இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா இணைந்தவுடன் அவருக்கு ஒரே மாதத்தில் முக்கியமான பதவி வழங்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் அவர் சீட் கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.