தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பு அணிகளில் ஒன்றான மருத்துவர் அணியில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தியே தற்போது தமிழக அரசியல் களம் சுழன்று கொண்டிருக்கிறது. கூட்டணிக்கு அழைப்பு விடுப்பதும், தொகுதிகள் உடன்பாடு, கூடுதல் தொகுதிகளை கேட்பது , புதிய நிர்வாகிகளை நியமிப்பது என அதுதொடர்பான பேச்சுவார்த்தைகளுமே தமிழகத்தில் நாள்தோறும் செய்திகளாக வந்த வண்ணம் உள்ளன.
அந்தவகையில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் ரேஸில் விறுவிறுப்பாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. முதல்கட்டமாக கட்சியின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த முடிவெடுத்துள்ள விஜய், அதற்கான பணிகளில் ஆயத்தமாகியுள்ளார். கட்சி ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, 120 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தவெகவில் உள்ள 28 அணிகளும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் கடந்தவாரம் தவெக தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணி , சட்ட ஆலோசனை அணி மற்றும் வழக்கறிஞர்கள் அணியின் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்றைய தினம் மருத்துவர்கள் அணிக்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் அடங்கிய புதிய நிர்வாகிகளின் பட்டியலை தவெக தலைமை வெளியிட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விஜய், கழகத்தின் உத்தரவு மற்றும் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். புதிய பொறுப்பாளர்களுக்கு நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.