அரியலூர் மாவட்டம் ஆதனூர் அரசு நடுநிலைப்பள்ளியை ஒட்டியுள்ள பெரிய ஏரியில் நீண்ட முதலை ஒன்று உள்ளதை பார்த்த பள்ளி மாணவர்களும், கிராம மக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக வனத்துறை மூலம் முதலையைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி அருகிலுள்ள ஆதனூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1988 ஆம் ஆண்டு அரசு ஆரம்பப் பள்ளியாக தொடங்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு முதல் அரசு நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 59 மாணவர்களும் 36 மாணவிகளும் சேர்ந்து 95 பேர் கல்வி பயின்று வருகின்றனர். ஐந்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி போதிக்கின்றனர். இந்த அரசு நடுநிலைப் பள்ளியின் மேற்கு மற்றும் வடக்கு புறத்தை ஒட்டி ஆதனூர் கிராமத்தின் பெரிய ஏரி உள்ளது. எப்பொழுதும் நீர் வற்றாத இந்த பெரிய ஏரியில் நீர் தழும்பி நிற்பதால் பள்ளி மாணவர்கள் தவறி விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் தங்களது பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் கட்டி தர வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் தரப்பிலும் கிராம பொதுமக்கள் சார்பிலும் அரசுக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது வரை கம்பி வேலி மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. காம்பவுண்ட் சுவர் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் பள்ளி அருகில் ஏரிக்கரையை ஒட்டி உள்ள மேட்டுப்பகுதியில் நீண்ட பெரிய முதலை ஒன்று படுத்து உள்ளதை பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் கண்டுள்ளனர். முதலையைக் கண்டு அச்சத்தில் அவர்கள் எழுப்பிய சத்தத்தை கேட்ட முதலை தண்ணீருக்குள் சென்றுள்ளது. இது ஆதனூர் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பெரிய ஏரியில் கிராமத்து மக்களும் சிலர் குளிக்க செல்வதும் உண்டு. அந்த பொதுமக்கள் பயன்படுத்தும் பெரிய ஏரியில் முதலை ஒன்று உள்ளது அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்ட வனத்துறையுடன் இணைந்து பெரிய ஏரியில் உள்ள முதலையை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பள்ளி மாணவர்களும் கிராமத்து மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதனூர் கிராமத்தை ஒட்டி மருதையாறு செல்கிறது. தற்பொழுது செய்து வரும் மழை காரணமாக மருதையாற்றில் முதலை வந்து ஆதனூர் கிராமத்தில் உள்ளே நுழைந்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இன்று சனிக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக முதலையை அகற்றி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அச்சத்தை நீக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

