Skip to content

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அரியலூர் கலெக்டர்

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு
24 மாற்றுத்திறன் நபர்களுக்கு ரூ.97,149 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்றையதினம் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியான “சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்போதும் உடன் நிற்போம் என்றும், அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளத்தில் அவர்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம்.

முழுமையாகவும், சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு எந்தப் பாகுபாடும் இன்றி, அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது இன்றியமையாதது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதி நட்புணவர்வை வளர்ப்போம் என்றும் உறுதிமொழி ஏற்கிறோம்” என மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி
வாசிக்க, அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு 01 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.15,750 மதிப்பில் சக்கர நாற்காலி, 21 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.68,985 மதிப்பில் காதொலி கருவிகள், 01 மாற்றுத்திறன் பயனாளிக்கு ரூ.11,445 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், 01 பயனாளிக்கு ரூ.969 மதிப்பில் ஆக்ஸிலரி ஊன்றுகோல் என மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூ.97,149 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!