அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் ரூ.11.19 கோடி மதிப்பீட்டில் 04 புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (12.12.2025) துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கிராம சாலைகளை மேம்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுதல்,

போர்வெல் மற்றும் சிமெண்ட் தொட்டி அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், ஏரிகள் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.11.19 கோடி மதிப்பீட்டில் 04 புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.
அதன்படி அரியலூர் நகராட்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் ரூ.287 இலட்சம் மதிப்பீட்டில் தினசரி சந்தை புதிய கட்டடம் கட்டும் பணியையும், பின்னர், எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் ரூ.300 இலட்சம் மதிப்பீட்டில் அரியலூர் – கோவிந்தபுரம் சாலை கி.மீ 1/4 – 5/0 வரை ஒரு வழித்தடத்திலிருந்து

இடைவழித்தடமாக சாலை அகலப்படுத்துதல் பணியையும், அதனைத்தொடர்ந்து கயர்லாபாத் ஊராட்சி அரசு சிமெண்ட் ஆலை அருகில் ரூ.266 இலட்சம் மதிப்பீட்டில் அரியலூர் – அயன் ஆத்தூர் – குடிசல் – தேளுர் சாலை (மா.மு – 1223) கி.மீ 3/6 – 5/6 சரை இடைவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக சாலை அகலப்படுத்துதல் பணியையும், தொடர்ந்து ரூ.266 இலட்சம் மதிப்பீட்டில் அரியலூர் – அயன் ஆத்தூர் – குடிசல் – தேளுர் சாலை கி.மீ 1/6 – 3/6 சரை இடைவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக சாலை அகலப்படுத்துதல் பணிகள் என மொத்தம் ரூ.11.19 கோடி மதிப்பீட்டில் 04 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு, உரிய காலத்திற்குள் விரைவாக முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுலவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் வடிவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, அரியலூர் நகர்மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

