பிரதமர் நரேந்திர மோடியின் பெருமைகளை ராஜேந்திர சோழனின் பெருமைகளோடு ஒப்பிட்டு பிரதமரை வரவேற்கும் வகையில் பாஜக சார்பில் பாடல் வெளியிடப்பட்டது.
ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரையை முன்னிட்டு ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, ஐந்து நாள் விழாவாக இந்திய கலாச்சாரத்துறை மற்றும் இந்திய கலைப் பண்பாட்டு துறை சார்பில் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் இறுதி நாளான வரும் ஜூலை 27ம்தேதி ராஜேந்திர சோழனின் தலைநகரான கங்கைகொண்ட
சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலய வளாகத்தில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில் பிரதமரை வரவேற்கும் வகையில் அரியலூர் மாவட்ட பாஜக சார்பில், மாவட்ட பொதுச் செயலாளர் இளையராஜா இயக்கி தயாரித்த வரவேற்பு பாடல் வெளியிடப்பட்டது. கங்கைகொண்ட சோழபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் பாடல் மென்தகட்டை வெளியிட்டார்.
பாடலில் ராஜேந்திர சோழனின் படைத்திறம், வீரம், வெற்றி, ஆன்மீகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் ராஜேந்திர சோழனின் கடல் கடந்து பல்வேறு நாடுகளில் படையெடுத்து பெற்ற வெற்றியையும், நரேந்திர மோடி பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர்களோடு கொண்ட நட்புறவையும் ஒப்பிட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்திய போர் படையில் பயன்படுத்தப்படும் பிரமோஸ், அக்னி ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன போர் கருவிகளை பயன்படுத்தி ராணுவத்தின் திறனை இந்த பாடலில் ராஜேந்திர சோழனின் படை திறனுடன் ஒப்பிட்டு கூறியிருக்கிறார்கள். இந்தப் பாடலை கட்சியின் இலக்கிய பிரிவு பொறுப்பாளர் கார்த்தி எழுதி உள்ளார். நிகழ்ச்சியில் பாஜக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.