அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறையில் சார்பில் வெங்கடகிருஷ்ணாபுரம், மேலக்கருப்பூர், ஆலந்துறையார்கட்டளை மற்றும் ஆண்டிப்பட்டாகாடு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் தூர்வாரும் பணிகள், புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டட கட்டுமான பணிகள், சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டத்தில், கிராமப்புறங்களின் உட்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குடியிருப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் அமைக்கும் பணிகள், புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டட கட்டுமான பணிகள், சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் தூர் வாரும் பணிகளை பார்வையிட்டு குளத்தின் ஆழத்தினை அளவிட்டும், கரைகளை முறையாக பலப்படுத்திடவும், பணிகளை விரைவாக முடித்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதன்பின்னர் மேலகருப்பூர் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்)-கீழ் தலா ரூ.5.07 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 08 புதிய குடியிருப்பு கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட்டு பயனாளிகளிடம் இதுநாள் வரையில் பெறப்பட்டுள்ள தொகை குறித்தும், அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வது குறித்தும் கேட்டறிந்து அப்பகுதி மகளிரிடம் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா எனவும், மகளிர் உரிமைத்தொகை முறையாக கிடைக்கப்பெறுகிறதா எனவும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா எனவும், சுய உதவிக்குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார். அப்பகுதி பெண்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்படவில்லை என தெரிவித்ததைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைப்பதன் மூலமாக சுய தொழில் துவங்குவதற்கு கடனுதவிகள் பெறலாம் எனவும், தங்கள் வாழ்வாதாரங்களுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள மகளிர் குழு மூலமாக குழுவாக சுய தொழில் தொடங்கவும் முடியும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சுய உதவிக்குழுக்கள் அமைத்திட அறிவுறுத்தினார்.
மேலும், மேலகருப்பூர் ஊராட்சி, பொய்யூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 15வது மத்திய நிதிக்குழு மான்யத் திட்டத்தின் கீழ் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைவாக முடித்திடவும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகைதரும் வெளிப்புற நோயாளிகளின் எண்ணிக்கை, மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் அப்பகுதியில் பயனாளிகளுக்கு முறையாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, ஆலந்துறையார்கட்டளை ஊராட்சியில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.49.85 இலட்சம் மதிப்பீட்டில் அரியலூர் – கருப்பூர் பொய்யூர்- ஓரியூர் முதல்
சிறுதொண்டான்காணி வரை (கி.மீ 0/0 -1/330) அமைக்கப்பட்டுள்ள சாலைகளை பார்வையிட்டு சாலையின் தரத்தினை துளையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், ஆண்டிப்பட்டாக்காடு ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.12 இலட்சம் மதிப்பீட்டில் ஆண்டிப்பட்டாக்காடு பரட்டை ஏரி தூர்வாரும் பணிகளையும், தொடர்ந்து ரூ.49.44 இலட்சம் மதிப்பீட்டில் அரியலூர் – கருப்பூர் பொய்யூர்- ஓரியூர் நானாங்கூர் முதல் புத்தூர் வரை (கி.மீ 0/0 -1/130) அமைக்கப்பட்டுள்ள சாலையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் உள்ள மேல் நிலை நீர்த் தேக்க தொட்டியில் மூலம் வழங்கப்படும் குடிநீரினையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் ரஜினிகாந்த் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ள “கலைஞரின் கனவு இல்லம்” கட்டுமான பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.87 இலட்சம் மதிப்பீட்டில் ஆண்டிப்பட்டாக்காடு ஊராட்சி, புத்தூர் கிராமத்தில் வண்டன்குளம் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு கரைகளை பலப்படுத்தவும், வரத்து கால்வாய் மற்றும் போக்கு கால்வாய்களை முறையாக தூர்வாரிடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) மாது, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.