அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அமைந்துள்ள புதுக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக உள்ள இந்த அய்யனார் கோவில் பண்டைய காலத்தில் அன்னவாசல் சர்வமங்கலம் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை சுற்றி பல வகுப்பினரை சார்ந்த பொதுமக்களும் வீடுகள் அமைத்து வாழ்ந்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் இவர்கள் குடி பெயர்ந்து பல ஊர்களிலும் வசித்து வருகின்றனர். வீடுகள் அளிந்து தற்பொழுது முந்திரிக் காட்டுக்குள் அய்யனார் கோவில் உள்ளது. ஆனால் அய்யனாரை குலதெய்வமாக கொண்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமிழக முழுவதும் பரவை வசித்து வந்தாலும் ஆடி மாசம் நடக்கும் தேரோட்டத்தில் ஒன்று கூடி அய்யனாருக்கு மாரியம்மனுக்கு திருத்தேரோட்டத்தை ஒன்றாக நடத்துகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த தேரோட்டம் என்பது முந்திரி மரக்காடுகளுக்கு நடுவில் நடைபெறுகிறது. இக்கோவிலின் ஆண்டுத் திருவிழா கடந்த 16ஆம் தேதி தொடங்கி தினந்தோறும் பல்வேறு வாகனங்களிலும், முத்து பல்லக்கிலும் அய்யனார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான
தேரோட்டம் இன்று நடைபெற்றது. திருத்தேரோட்டத்தை ஒட்டி பூர்ண புஷ்கலாம்பிகா உடனுறை ஸ்ரீ அய்யனார் மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் உற்சவ
மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர், சுமார் 35 அடி உயரமும், 11 அடி அகலமும் கொண்ட கலைநயம் கொண்ட தேரில் அய்யனாரும், மாரியம்மனும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதனையடுத்து தேரோராட்டத்தை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை மனம் உருகி வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். முந்திரி காட்டுக்குள் மண் தரையில் பக்தர்களின் மனம் குளிர் அய்யனாரும் மாரியம்மன் உருண்டோடி வந்தனர். மூத்தோர்கள் வழிபட்ட அய்யனார் தங்களது குலதெய்வமாக விளங்கி வருகையில், அவர் சென்ற பாதையிலேயே தேரோட்டம் நடைபெற வேண்டும் என்பதற்காக தற்பொழுது முந்திரிக்காட்டுக்குள் அவரவர்கள் முந்திரி மரங்களை வெட்டி தேரோட்டத்திற்கு வழி வகுத்து தருகின்றனர். வழி வழியாக வரும் பாதையில் முந்திரிக் காட்டுக்குள் அசைந்தாடும் வரும் தேரை பார்க்கையில் தமிழர்களின் பாரம்பரியமும் அவர்களின் தெய்வீக பத்தியும் எக்காலத்திலும் எவராலும் மறைக்கவும் முடியாது மறைக்கவும் மறையாது என்பதை பறைசாற்றுவதாக அமைகின்றது.