அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆயிப்பாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த அபிதகுஜாம்பிகை அம்பாள் சமேத அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 96 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி சிதலமடைந்த சிவாலயத்தை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என ஊர் பொதுமக்கள் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி கடந்த ஏழாம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு
பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட யாகசாலையில் சிவாச்சாரியார்களை கொண்டு வேத மந்திரங்களை முழங்க கடம் புறப்பாடு இன்று காலை நடைபெற்றது. பின்னர் வான வேடிக்கையுடன் மங்கள வாத்தியுடன் புறப்பட்ட கடமானது கோவிலை வலம் வந்து விமானம் கலசத்திற்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நமசிவாய, சிவாய நம, என பக்திகோஷங்களை எழுப்பி வழிபட்டனர். புனித கலசத்திற்கு ஊற்றப்பட்ட நீர் பின்னர் கோவிலில் சுற்றி கூடியிருந்த பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. முடிவில் மகா தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருள்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 96 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.