அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை மூலவரான பிரகதீஸ்வரர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு 320 லிட்டர் பால் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் பின்னர் பெருவுடையாருக்கு மாலை சாத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அபிஷேகம் நிறைவடைந்த பின்னர் மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட பெருவுடையாருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள், நமச்சிவாயா, நமச்சிவாயா, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் நீங்க தாள் வாழ்க, என்று பக்தி கோஷம் எழுப்பினர். நாளை காலை 100 மூட்டை அண்ணன் பிடித்து பெருவுடையாருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை ஆறு மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்று பின்னர் பெருவுடையாருக்கு சாத்தப்பட்ட அன்னத்தை பக்தர்களுக்கும் உலக ஜீவராசிகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்பு பெருவுடையாரை தரிசனம் செய்தனர்.

