அரியலூர் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு வந்து மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி வீடுகளுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அருகில் உள்ள நகராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில் கடந்த 10 நாட்களாக சுகாதாரமற்ற குடிநீர் வருவதாக குற்றம் சாட்டி நகராட்சி அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். சுகாதாரமற்ற குடிநீர் வருவதால் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், இதுவரை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் வந்து சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வில்லை என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுகாதாரமற்ற குடிநீரை எடுத்து வந்து அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பத்து தினங்களாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அன்றாடம் வேலைக்கு செல்லும் தங்களால் காசு கொடுத்து நல்ல குடிநீர் வாங்கி அருந்த முடியாது என்றும் குற்றம் சாட்டி பெண்கள் கோஷம் எழுப்பினர். இதற்குப் பின்னர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர்.