அரியலூர் நகராட்சிக்குட்பட்ட மேலத்தெருவில் உள்ள அருள்மிகு படைபத்து மகா மாரியம்மன் கோவில் இப்பகுதி மக்களுக்கு பிரசித்தி பெற்ற கோவிலாகும். கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, கடந்த 29-ஆம் தேதி யாக சாலை பூஜை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாட்கள் யாகசாலையில் மூன்று கால பூஜைகள் தினம் தோறும் நடைபெற்றது. ஏழாம் நாளான இன்றுகாலை நான்காம் கால பூஜைகள் முடிவடைந்த உடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ராஜகோபுரம், அம்பாள் கோபுரம், ஆகியவற்றிற்கு சிவாச்சாரியார்களால் எடுத்து வரப்பட்ட புனித நீர், கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன்பின்னர்
மூலஸ்தானத்தில் உள்ள படைப்பத்து மகாமாரியம்மனுக்கு யாக சாலையில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் ராட்சத ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் முன்னாள் அரசுக் கொறடாவும், அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளருமான தாமரை ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தும் மாரியம்மனை வழிபட்டும் சென்றனர்.