அரியலூர் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் ஐந்தாண்டுகளுக்கு பிறகு மயானக் கொள்ளை திருவிழா நேற்று தொடங்கியது. கோவில் வளாகத்தில் நேற்று மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை கோயிலிலிருந்து பெரியநாயகி அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக பக்தர்களால் கொண்டுவரப்பட்டார்.



அங்கு மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த சுவாமி அம்பாள் உருவத்துக்கு கீழ் கொட்டப்பட்டிருந்த அரிசி சாதத்தில், கிடா வெட்டி அதன் ரத்தம் கலந்த சாதத்தை, அங்கு திரண்டிருந்தது பெண்கள் மடியேந்தி பெற்றுக்கொண்டனர். இந்த திருவிழாவில் பங்கேற்று, ரத்த கலந்த சாதத்தை சாப்பிட்டால், குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பேறு, திருமணத்தடை, பில்லி, சூனியம் உள்ளிட்டவை நீங்கும் என்ற ஐதீகத்தால் அரியலூர் நகர பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சாமி ஆடிகள், பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கிய கோழிகளை பெற்று, அதன் ரத்தத்தை உறிஞ்சி குடித்தனர்.
குழந்தை பேரு வேண்டிய பெண்கள் மற்றும் திருமணத் தடை உள்ள பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சுவாமி அம்பாள் இடமிருந்து பெற்ற ரத்ன சாதத்தை பிரசாதமாக பெற்று சென்றனர். மேலும் காளி வேடம் அணிந்த சாமியாடிகள் முறத்தால் அடித்தால், பில்லி சூனியம் விலகும் மற்றும் நோய்கள் அகலும் என்ற ஐதீகத்தால் பலரும் சாமியாடிகளிடம் முறத்தால் அடி வாங்கிக் கொண்டனர். அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயான கொள்ளை திருவிழாவை கண்டு பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

