அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அரசு வாய்மொழியாக அறிவித்துள்ள மருத்துவர்கள் கலந்தாய்விற்கான ஒரு வருட பனிக்கால பூர்த்தி விதியை கைவிட கோரி மனு அளித்துள்ளனர்.
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் மருத்துவக் கல்லூரி டீன் முத்துகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளனர். அம்மனுவில் மருத்துவர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு பல்வேறு காரணங்களால் முறையான படி கால இடைவெளிகளில் இதுவரை நடத்தப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு வாய்மொழி உத்தரவாக புதியதாக ஒரு வருட பணிக்கால பூர்த்தி விதி ஒன்றை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி பணி மாறுதல் பெற்று வரும் மருத்துவர்கள் அல்லது பேராசிரியர்கள் அடுத்த உயர் பதவி மாறுதல்களுக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஒரு வருடம் முடிந்த பிறகே வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஒரு வருட விதி வலியுறுத்தப்பட்டால், மருத்துவ கண்காணிப்பாளர் கலந்தாய்வு, வைஸ் பிரின்ஸ்பால் கலந்தாய்வு (Vice Principal) பேராசிரியர் கலந்தாய்வு, இணை பேராசிரியர் கலந்தாய்வு, உதவி பேராசிரியர் கலந்தாய்வு, DMS மற்றும் DPH கலந்தாய்வு, சர்வீஸ் PG கலந்தாய்வு, கலந்தாய்வுக்கு வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பாதிக்கப்படுவார்கள். (இது தவிர DMS,DPH மருத்துவர்களும் அவர்களின் கலந்தாய்வின்போது பாதிக்கப்படுவார்கள்).
பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், ஒரு வருடத்திற்கு குறைவாக ஸ்டேஷன் சீனியாரிட்டி உள்ள அனைவரும் அரசு வைத்த கடந்த கலந்தாய்வில் பதவி உயர்வு/ பணி மாற்றம் பெற்று தற்போது பணியாற்றி வருபவர்கள். இவர்களுடைய பதவி உயர்வு / பணி மாற்றம் கலந்தாய்வு நிர்வாக காரணங்களால் ஒவ்வொரு வருடமும் தாமதமானதால் தற்பொழுது ஒரு வருடம் நிறைவடையாத நிலையில் உள்ளனர். இது தனியருடைய தவறு அல்ல,மாறாக நிர்வாக பிரச்சனை. இதனால் பணியில் ஜூனியர் மருத்துவர்கள் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை எடுத்து விடுவார்கள். இது ஸ்டேஷன் சீனியாரிட்டி முறையை முற்றிலும் சீர்குலைத்து விடும். எனவே இந்த ஒரு வருட விதி என்பதை உடனடியாக அரசு கைவிட வேண்டும் என்று கூறி தங்களது மனைவில் குறிப்பிட்டுள்ளனர். நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர் கொளஞ்சிநாதன் தலைமையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பங்கேற்று கோரிக்கை மனுவை அளித்தனர்.