அரியலூர் மாவட்டம் அரியலூர் நகர் பகுதியில் சிமெண்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்பு கற்கள் ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக செல்லும் கனரக டிப்பர் லாரிகளால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடையும் நிலை தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் இன்று அரியலூர்-பெரம்பலூர் புறவழிச்சாலையில் இருந்து, அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலை நோக்கி சுண்ணாம்பு சுரங்கத்திற்கு சென்ற கனரக டிப்பர் லாரி, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ராயம்புரம் ஊரைச் சேர்ந்த ரங்கராஜ் மீது மோதியது.
இதில் காயம் அடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட சாலையில் ரங்கராஜ் விழுந்த நிலையில், அவர் வந்த இருசக்கர வாகனத்தை கனரக லாரி சில மீட்டர் தூரம் இழுத்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நின்றது.
இதனையடுத்து ஆட்சியர் அலுவலக வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சாலையின் ஓரம் அமர வைத்தனர்.
அவ்வழியே வந்த பெண் ஒருவர், தனது வண்டியிலிருந்து குடிநீரைக் கொண்டு வந்து அந்த முதியவருக்கு தந்து ஆசுவாசப்படுத்தினார்.
இதனிடையே ஓட்டுநர் செல்வத்தை சாலையின் ஓரமாக சென்று லாரியை நிறுத்துமாறு, காவல்துறை அறிவுறுத்தினர். அப்போது வந்த பொதுமக்கள் சிலர் அதிவேகமாக இயங்கும்

லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், ஏன் வேகமாக வந்தாய்? எனக்கேட்டு லாரி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், லாரியினுள் அமர்ந்திருந்த ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முற்பட்டனர்.
ஒருகட்டத்தில் ஓட்டுனர் செல்வம் பயந்து லாரியில் இருந்து கீழிறங்கி ஓடத்தொடங்கியதும், அவரை சாலையில் துரத்திச் சென்று தாக்கியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தலையிட்டு ஓட்டுநரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு விபத்தில் சிக்கிய ரங்கராஜை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அரியலூர் நகரில் அடிக்கடி கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்தை தவிர்க்க டிப்பர் லாரியில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

