Skip to content

அரியலூர்… தொழில் தொடங்க கடன் தருவதாக ரூ. 17 லட்சம் மோசடி.. குற்றவாளிகள் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் கோபிநாதன் (வயது 43) த/பெ கோவிந்தராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தொழில் தொடங்க தனது நிலத்தை அடகு வைத்து, 6 கோடி பணம் பெற, பல கடன் நிதி நிறுவனங்களிடம் முயற்சி செய்து வந்தார்.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (55)என்பவர், கோபிநாதன் கடன்பெற முயற்சித்து வருவதை தெரிந்துகொண்டு, ஏமாற்றும் நோக்கத்தில் கோபிநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு, தனது பெயர் சக்கரவர்த்தி என்றும், பைனான்சியர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
6 கோடி கடன் தர வேண்டுமென்றால், 1 கோடிக்கு 2 லட்சம் வீதம் 6 கோடிக்கு 12 லட்சம் ரூபாய்க்கு, 25 ஆயிரம் ரூபாய் முத்திரைத்தாள் பத்திரம் 48 வாங்கி அதனை ஸ்கேன் செய்து வாட்ஸ் அப்பில் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய கோபிநாதன் முத்திரைத்தாள் வாங்க முயற்சித்தார். ஆனால் வாங்க முடியவில்லை. இதுகுறித்து கோபிநாதன், செல்வராஜிடம் கூறியுள்ளார்.அதற்கு செல்வராஜ் , தனது நண்பர் சிவசங்கர் என்பவர் அரியலூர் மாவட்டத்தில் கருவூல அதிகாரியாக உள்ளார் என்றும், அவரிடம் சென்று பணத்தை அளித்து பத்திரத்தை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

(காவல்துறை விசாரணையில் சிவசங்கரின் உண்மையான பெயர் பிரகதீஷ் (வயது 39), த/பெ சிவானந்தம் என்றும், இவர் கரூர் மாவட்டம் சுங்ககேட் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.)
இதனை நம்பிய கோபிநாதன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிவசங்கர் என்கிற பிரகதீஷ் மற்றும் கரூர் மாவட்டம் பெரியபுதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (வயது 27), த/பெ முனியப்பன் என்பவர்களை சந்தித்துள்ளார். பிரகதீஷ் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலகத்தில் பணியாற்றுவது போலவும், ஆனந்த் அவரிடம் முத்திரைத்தாள் பத்திரம் பெற்ற நபர் போல் நம்ப வைத்துள்ளனர். பிரகதீஷ், கோபிநாதனிடமிருந்து பத்திர முத்திரை தாளுக்காக ரூபாய் 12 லட்சம் மற்றும் கமிஷன் 10 ஆயிரம்

ரூபாய் (12 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்) பணத்தை பெற்றுள்ளனர். பின்னர் பிரகதீஷ், கோபிநாதனிடம் 23 முத்திரைத்தாள்கள் மட்டுமே உள்ளதாகவும் மீதி பத்திரத்தை ஜெயங்கொண்டம் அரசு கருவூலம் அலுவலகத்திற்கு சென்று எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு காரில் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் கோபிநாதன் ஜெயங்கொண்டம் அரசு கருவூலம் சென்று பிரகதீஷ்-ஐ தேடி உள்ளார்.
பிரகதீஷ்-ஐ தொடர்பு கொள்ள முடியாததால் கோபிநாதன், செல்வராஜ்-யை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். செல்வராஜ், கோபிநாதனை நீங்கள் தஞ்சாவூர் செல்லுங்கள் 06.03.2025 அன்று நான் நேரில் வந்து பத்திரங்களை தருகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதன் பின்னர் செல்வராஜ்-யையும் மற்ற நபர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பின்னர் கோபிநாதன், செல்வராஜ் மற்றும் பிரகதீஷ் இடமிருந்து பணம் பெற பல வகைகளில் முயற்சி செய்துள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட கோபிநாதன், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரியிடம் கடந்த 19.09.2025 அன்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அரியலூர் மாவட்ட குற்றப் பிரிவில் முதற்கட்ட விசாரணை செய்து, 21.09.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கயர்லாபாத் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி (மாவட்ட குற்றப்பிரிவு பொறுப்பு), காவல் உதவி ஆய்வாளர் அமரஜோதி தலைமையிலான காவல்துறையினர், 21.09.2025 அன்று கரூர் மற்றும் திருப்பூரில் தலைமறைவாக இருந்த, செல்வராஜ், பிரகதீஷ், மற்றும் ஆனந்த் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

மேலும் செல்வராஜிடம் இருந்து Kia sonet car -1 , ATM card -2, பணம் – ரூபாய் 14,590 மற்றும் செல்போன்கள் -14, சிம் கார்டுகள் -14 பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் போலியான பெயர்களில் இவர் சிம்கார்டு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. பிரகதீஷ்-யிடம் இருந்து செல்போன்கள் -3 மற்றும் ATM card -4 பறிமுதல் செய்யப்பட்டது.ஆனந்த்-யிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ்சாரின் விசாரணையில்
மேற்கண்ட மூவரும் மீண்டும் 21.04.2025-ம் தேதி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதே போன்று திருச்சி மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் (50) என்பவரிடம் லோன் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 5,10,000/- ஏமாற்றியுள்ளனர். மேலும் செல்வராஜ் மீது திருச்சி மாநகரம் செஷன் கோர்ட் காவல் நிலையத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு 2 மோசடி வழக்குகள் உள்ளன. அவை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
செல்வராஜ், பிரகதீஷ் மற்றும் ஆனந்த் ஆகிய மூன்று நபர்களையும் குற்றப்பிரிவு காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

21.09.2025 அன்று வழக்கு பதிவு செய்து அன்றைய தினமே குற்றவாளிகளை கைது செய்த கயர்லாபாத் காவல் ஆய்வாளர்வேலுச்சாமி ( மாவட்ட குற்றப்பிரிவு பொறுப்பு), தலைமையிலான காவல்துறையினரை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் (மாவட்ட குற்றப்பிரிவு பொறுப்பு) ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!