அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் இருந்து செந்துறை வரை, தினந்தோறும் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து, தஞ்சாவூர் மாவட்டம் குறிச்சி கிராமத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இந்தப் பால் வண்டியை ஓட்டி செல்வார். இன்று காலை டாடா ஏசி பால் வண்டி வாகனத்தை செந்துறை பேருந்து நிலையம் அருகே சதீஷ். ஓட்டி வந்த போது பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து எம்.சான்ட் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இவ்விபத்தில் டாடா ஏசி ஒட்டுனர் சதீஷ் வாகனத்தின் உள்ளேயே சிக்கித் தவித்தார். உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் டாடா ஏசி வாகனத்தை ஓட்டி வந்த சதீஷை உயிருடன் போராடி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒருவழியாக நீண்ட போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டு, அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அரியலூர் மாவட்ட நிர்வாகம் காலை 7 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் இயக்க தடை விதித்திருந்தும், தடையை மீறி வேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து செந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
