Skip to content

அரியலூர்…. லஞ்சம் வாங்கிய விஏஓ பணியிடை நீக்கம்…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே விஏஓ லஞ்சம் பெற்றதாக வீடியோ வைரலான விவகாரத்தில் ஆட்சியர் பொ.ரத்தினசாமி பரிந்துரையின் பேரில், கூவத்தூர் VAO திருஞான சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் ஷீஜா உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கே.என்
குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி விவசாயியான இவர் தனது மகன் சதீஷ் மற்றும் அவரது உறவினர் சக்திவேல் மனைவி மீனா ஆகியோருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கூவத்தூர் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தனிப்பட்டா கேட்டு 2 மனுக்களை வருவாய் துறை அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்து அதற்கான ரசிதையும் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் அவரது மனு தொடர்பாக விசாரணைக்கு கூவத்தூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் திருஞானசம்பந்தம் என்பவர் விவசாயி தட்சிணாமூர்த்தியிடம் தனி பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்றால் மனு ஒன்றுக்கு ஆயிரம் என மொத்தமாக ரூபாய் 2000 லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். தன்னிடம் ரூபாய் ஆயிரம் மட்டுமே இருப்பதாகவும் அதற்கு மேல் கொடுப்பதற்கு தன்னிடம் வசதியில்லை என்று தன்னிடம் இருந்த ரூபாய் ஆயிரத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்தார். அதனைப் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் திருஞானசம்பந்தம் இது போதாது என்றும் இதை வைத்து யாருக்கு எப்படி கொடுக்க முடியும் என்றும் இந்த பணத்தை நீயே வைத்துக்கொள் என்று கறாராக நடந்து கொண்டார். விவசாயி தட்சிணாமூர்த்தி பலமுறை சொல்லிப் பார்த்தும் கிராம நிர்வாக அலுவலர் திருஞானசம்பந்தம் விடுவதாக இல்லை. விவசாயியிடம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சமாக பணம் வாங்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே இதே விவசாயிடம் கிராம நிர்வாக அலுவலர் திருஞானசம்பந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலம் தொடர்பான மனுவிற்கு ரூபாய் 7000 லஞ்சம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு ஏழுந்துள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே விஏஓ லஞ்சம் பெற்றதாக வீடியோ வைரலான விவகாரத்தில் ஆட்சியர் பொ.ரத்தினசாமி பரிந்துரையின் பேரில், கூவத்தூர் VAO திருஞான சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் ஷீஜா உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!