அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட வெண்மான்கொண்டான், கருப்பிலாக்கட்டளை, திருமானூர், அன்னிமங்கலம், கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் இன்று நடந்தது. இதனை அமைச்சர்கள் சிவசங்கர், சி.வி. கணேசன் தொடங்கி வைத்து 2,204 பயனாளிகளுக்கு ரூ.12.96 கோடி மதிப்பிலான பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் பொதுமக்களிடமிருந்து 1097 மனுக்கள் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை 5 மணி வரையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலையில் நடைபெற்றது.
மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாமினை தொடங்கி வைத்து போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
மக்கள் நம்மை நாடி வந்து மனு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அரசே மக்களை நாடிச் சென்று சேவை புரியும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் மனு நீதி நாள் முகாம் தொடங்கபட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதனை விரிவுப்படுத்தி அனைத்து அரசுத் துறைகளும் மக்களை நேரடியாக சந்தித்து மக்களுக்கான சேவைகளை வழங்கிட வேண்டும் என அறிவித்ததன் அடிப்படையில் இன்றையதினம் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

மக்களுடைய எதிர்பார்பினை பூர்த்தி செய்கின்ற அளவிற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை நடைமுறைப்படுத்தி அது மிகச்சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டத்தில் விடுப்பட்டவர்களுக்கும் இம்முகாமில் மனுக்களை வாங்கி அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதிலும் இதற்காக காத்திருக்கின்ற மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் இந்த முகாம் மிகச்சிறப்பான வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்களை பின்பற்றி மற்ற மாநிலங்கள் செயல்படுத்துகின்றன. அரசு நகரப்பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில் விடியல் பயண திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார். இத்திட்டத்தினை மற்ற மாநிலங்களில் பின்பற்றி செயல்படுத்தி வருகிறார்கள். எனவே மக்களை நாடி வருகின்ற, மக்களுக்கான அரசை நடத்துகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.\இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் பேசினார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பேசியதாவது:
ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ஆதிதிராவிடர் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான மானிய உதவித்தொகைகள், அயற்நாட்டில் கல்வி பயில்வதற்கான உதவித்தொகைள், தாட்கோ நிறுவனத்தின் வாயிலாக பல்வேறு மானிய உதவித்தொகைகள், படித்த இளைஞர்களுக்கு அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.150 இலட்சம் வரையில் கடனுதவிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம். மேலும் நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மக்கள் நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய முதலமைச்சராக திகழ்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதத்திற்கு பிறகு பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் கோவிந்தராஜ் (அரியலூர்), ஷீஜா (உடையார்பாளையம்), மாவட்ட நிலை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.