பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இதில் 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்நிலையில், சிறையிலுள்ள பொன்னை பாலுவின் தாய் காலமானதால், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

