Skip to content

கலைஞரின் உரிமைத்தொகை.. பெண்களுக்கான வரப்பிரசாதம்- அமைச்சர் சிவசங்கர் பேச்சு

பெண்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய அங்கமாக கலைஞரின் உரிமைத்தொகை திட்டம் மாறி உள்ளது… அமைச்சர் சிவசங்கர்…

மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்த முடியாத திட்டம் எனக் கூறியவர்களே அந்தத் திட்டத்தை பிற மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அரியலூர் மாவட்ட இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கு, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், கலைஞர் உரிமைத் தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதன் மூலம், தமிழகப்

பெண்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய அங்கமாக கலைஞரின் உரிமைத்தொகை திட்டம் மாறி உள்ளது.
இத்திட்டத்தை பற்றி கேலி பேசிய கட்சிகள், வட மாநிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தினர். ஆனால் அவர்களால் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. பல மாநிலங்களில் இத்திட்டம் தொடங்கிய போது இருந்த எண்ணிக்கையை, மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டே வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தொடக்கத்தில் வழங்கப்பட்ட எண்ணிக்கையை விட, மீண்டும் திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டாம் கட்டமாக கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,57,494 பெண்கள் கலைஞர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். தற்போது இரண்டாம் கட்டமாக 16,525 பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில்

மொத்தம் 1,74,019 பெண்கள் பயன் பெறுகின்றனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றாமல் பாதியிலேயே விட்டுச் சென்றதை நாம் அறிவோம். தாலிக்கு தங்கம் திட்டம், கடைசி இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தாமல் போனார்கள்.
அதேபோன்று பல்வேறு திட்டங்களும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. ஆனால் கடுமையான நிதி நெருக்கடியிலும், அறிவித்த திட்டங்களை நமது முதலமைச்சர் செயல் படுத்தி வருகிறார்.
மகளிர் விடியல் பயணம், நான் முதல்வன், காலை உணவு திட்டம் உள்ளிட்ட அறிவித்தது, அறிவிக்காதது என பல்வேறு திட்டங்களை நமது முதலமைச்ச செயல்படுத்தி வருகிறார்.
அதற்கு மகுடம் வைத்தது போன்ற திட்டம் தான், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாகும். இத்திட்டம் செயல்படுத்த முடியாது, வாய்ப்பில்லை, இலவச திட்டம் என்று கூறிய சில கட்சிகள், தேர்தல் நேரத்தில் பிற மாநிலங்களில் வாக்குறுதியாக கொடுத்து வெற்றி பெற்று உள்ளனர்.
பிற மாநிலங்களில் வாக்குறுதி கொடுத்து செயல்படுத்தாத சூழலில், தமிழ்நாட்டில் தான் தொடக்கத்தில் கொடுத்தது மட்டுமின்றி மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, இரண்டாம் கட்டமாக பலருக்கும் கொண்டு செல்லும் வகையில் செயல்படுத்தப்படுகிறது என கூறினார்.

error: Content is protected !!