Skip to content

2 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம்.. ஜோதிடருக்கு 200 ஆண்டு சிறை..

சிவகங்கை மாவட்டம், மானகிரியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 52; ஜோதிடம் மற்றும் தோஷம் கழிப்பது போன்ற பரிகார பூஜைகளை செய்து வந்தார்.

இவரிடம், 2021 நவம்பரில், பெண் ஒருவர், 18, 14 வயதுடைய இரு சிறுமியருக்காக ஜோதிடம் கேட்க வந்தார். சரியாக படிக்காத சிறுமியருக்கு பரிகாரம் செய்யுமாறு அப்பெண் கூறியுள்ளார்.

சிறுமியரை மானகிரி வீட்டிற்கு பரிகார பூஜைகள் செய்ய அழைத்து வரும்படி, அப்பெண்ணிடம் ஜோதிடர் கூறியுள்ளார். அதை நம்பி, அப்பெண் 2 சிறுமியையும் அழைத்துச் சென்றுள்ளார். பெண்ணை ஒரு ரூமில் தனியாக இருக்குமாறு கூறிய ராமகிருஷ்ணன், 2 சிறுமிகளையும் தனியாக ஒரு ரூமிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார். மேலும், இத்தகவலை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும், மீறி கூறினால் தாய் – தந்தை இறந்து விடுவர் என்று சொல்லி மிரட்டியுள்ளார்.

இதனால், இரு சிறுமியரும் இந்த தகவலை வெளியே சொல்லவில்லை. 2 ஆண்டுகள் கழித்து, இரு சிறுமியருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, அவர்களுக்கு பால்வினை நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரித்த போது, ராமகிருஷ்ணனுக்கு பால்வினை நோய் பாதிப்பு இருந்ததும், அவரால் இந்த சிறுமியருக்கும் அந்த தொற்று ஏற்பட்டதும் தெரிந்தது.

இதுகுறித்து, சிறுமியரின் பெற்றோர் புகாரின்படி, திருப்புத்துார் மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு, சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. ராமகிருஷ்ணனுக்கு, 200 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட இரு சிறுமியருக்கும் தலா, 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

error: Content is protected !!