தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், கிராமப்புற மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் இன்னும் ரொக்கப் பணத்தையே அதிகம் சார்ந்துள்ளனர். ஏடிஎம்களில் பெரும்பாலும் ரூ.500 மற்றும் ரூ.200 தாள்களே கிடைப்பதால், அவற்றுக்குச் சில்லறை பெறுவதில் மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக, ஏடிஎம்களில் ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 போன்ற சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக ‘ஹைப்ரிட் ஏடிஎம்’கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் பெரிய மதிப்புள்ள நோட்டுகளைக் கொடுத்து சில்லறை நோட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது மும்பையில் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைகள், ரயில் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் நிறுவப்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதும் இந்த ஹைப்ரிட் ஏடிஎம்கள் கொண்டு வரப்பட உள்ளன.

