Skip to content

கேரளாவில் அமைச்சர் மீது தாக்குதல்.. 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கு முன் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த உஷா ஜோசப் என்ற பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு எதிராக மாநிலம் முழுவதும் காங்கிரஸ் மாணவர் சங்கத்தினர் மற்றும் இளைஞர் காங்கிரசார் போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று கண்ணூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் திருவனந்தபுரம் திரும்புவதற்காக கண்ணூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். கண்ணூர் ரயில் நிலையத்துக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் வர உள்ளதை அறிந்து மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கண்ணூர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைச்சர் வீணா ஜார்ஜை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இந்த சமயத்தில் அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தன்னுடைய கழுத்தில் கடுமையான வலி இருப்பதாக வீணா ஜார்ஜ் கூறினார். இதைத் தொடர்ந்து அவரை உடனடியாக கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் வீணா ஜார்ஜை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதன்பின் பினராயி விஜயன் கூறுகையில், ஒரு பெண் அமைச்சரை தாக்கிய சம்பவம் காங்கிரசின் மோசமான அரசியலை காட்டுகிறது என்றார். அமைச்சர் வீணா ஜார்ஜ் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சிவன்குட்டி, முகம்மது ரியாஸ் உள்பட அமைச்சர்கள், சபாநாயகர் ஷம்சீர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் தாக்கப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதில் காங்கிரஸ் மாணவர் சங்கத்தினரின் பேனர் மற்றும் கொடிக்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதற்கிடையே அமைச்சர் வீணா ஜார்ஜை போராட்டக்காரர்கள் தாக்கவில்லை என்றும், அவருடைய கையில் ஏற்கனவே காயம் இருந்தது, இது அவருடைய நாடகம் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கருப்பு கொடி போராட்டத்திற்கு தலைமையேற்ற கண்ணூர் மாவட்ட தலைவர் அதுல், பொருளாளர் அக்சய் மிட்டல் மற்றும் முபாஸ். பிதுல் பாலன் மற்றும் முகமது யாசின் ஆகிய 5 பேர் மீது கண்ணூர் நகர போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!